அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்: “வட கிழக்கு அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், மெதுவாக வட மேற்கு திசையில் கரையை நோக்கி நெருங்கி வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கி வருகிறது. ஜாக்குவா போர்ட் பகுதியில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவபூமி துவாராகவில் இருந்து 290 கிலோ மீட்டர் தொலைவிலும், நாலியாவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது.
இந்தப் புயல் வடகிழக்குத் திசையில் நகர்ந்து சவுராஷ்ட்ராவுக்கும் கட்ச் பகுதிக்கும் இடையே நாளை மாலை கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புயலால், மணிக்கு 125-135 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இது அதிகபட்சம் மணிக்கு 150 கிலோ மீட்டராக அதிகரிக்கலாம்.
கனமழை எச்சரிக்கை: புயல் காரணமாக இன்று கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், ராஜ்கோட், ஜூனாகர், மோர்பி மாவட்டங்களில் கன மற்றும் மிக கனமழை பெய்யும். கட்ச், தேவபூமி துவாரகா, ஜாம்நகர் மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும். இந்த மாவட்டங்களில் நாளையும் மிக கனமழை பெய்யும்.” இவ்வாறு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தயார் நிலையில் மீட்பு வீரர்கள்: மேலும், மத்திய அரசு, மாநில அரசு, இந்திய விமானப்படை, கடற்படை, கடலோர காவல்படை மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட அனைத்து அமைப்புகளும் பிப்பர்ஜாய் புயலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளன. அதிக சேதம் ஏற்படக்கூடும் என அஞ்சப்படும் இடங்களில் இருந்து கால்நடைகளும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இந்நிலையில் புயலால் பாதிக்கப்படும் குஜராத் பகுதி மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர்.