புதுடில்லி, அமெரிக்காவுக்கு முதல் முறையாக அரசு முறை பயணம் மேற்கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ.நா.,வில் நடக்கும் யோகா தினம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
கடந்த 2014ல் பிரதமராக பதவியேற்றதில் இருந்து, குறைந்தபட்சம் ஆண்டுக்கு ஒருமுறையாவது, அமெரிக்காவுக்கு மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், முதல் முறையாக அரசு முறை பயணத்தை அவர் மேற்கொள்ள உள்ளார்.
வரும் 21 முதல் 24ம் தேதி வரை அமெரிக்காவில் பல நிகழ்ச்சிகளில் மோடி பங்கேற்கிறார். 21ம் தேதி முதல் நிகழ்ச்சியாக, நியூயார்க்கில் உள்ள ஐ.நா., சபை வளாகத்தில் நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
அங்கிருந்து வாஷிங்டன் செல்லும் அவர், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் சிறப்பு விருந்தில் பங்கேற்கிறார்.
அதற்கடுத்த நாள், வெள்ளை மாளிகையில் இரு தலைவர்களும் சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளனர்.
அதற்கு முன், பிரதமர் மோடிக்கு சிறப்பு வரவேற்பு நிகழ்ச்சி நடக்க உள்ளது. இதில், பல முக்கிய பிரமுகர்கள் பங்கேற்ற உள்ளனர்.
இந்தப் பயணத்தின்போது, அமெரிக்க பார்லிமென்டில் மோடி உரையாற்ற உள்ளார்.
இதற்கு முன், 2016ல் அந்த நாட்டின் பார்லிமென்டில் அவர் உரையாற்றி உள்ளார்.
இதைத் தவிர, அமெரிக்கா – இந்தியா ராணுவ ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டம், அமெரிக்க நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டம் உட்பட பல நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
இந்திய வம்சாவளியினர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கிறார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement