அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த போது, 81 பேருக்கு அரசு வேலை வாங்கி தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் செய்யப்பட்டது. இதில் நடந்த முறைகேடு, சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக செந்தில் பாலாஜி, அவரின் சகோதரர் மற்றும் இவர்களுக்கு நெருக்கமானவர்களின் மீது சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
இதன் தொடர்ச்சியாக நேற்று (ஜூன் 13) காலை அமலாக்கத்துறை அதிகாரிகள், அமைச்சர் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமைச் செயலகத்தில் உள்ள அவரின் அலுவலகம், மந்தைவெளி பிஷப் கார்டன் பகுதியில் உள்ள அவரின் சகோதரர் அசோக்குமார் வீடு, கரூரில் இவர்கள் சம்பந்தப்பட்ட இடங்கள் என திடீர் சோதனையில் ஈடுபட்டனர். காலை எட்டு மணிக்கு மேல் தொடங்கிய சோதனை இரவு 1:30 மணி வரை நீடித்தது. கிட்டத்தட்ட 17 மணி நேரங்களுக்கு மேல் நடைப்பெற்ற இந்த சோதனையை அடுத்து நள்ளிரவு 2.15 மணிக்கு கைது செய்யப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி என்ற தகவல் வெளியானது.
இரவு 1.30-க்கு நடந்தது என்ன?:
காலை முதல் விசாரணையில் இருந்த அதிகாரிகள் சிலரை தொடர்பு கொண்டு பேசும் போது, சில தகவல்கள நம்மிடம் பகிர்ந்தார்கள். “12-ஆம் தேதி இரவு எட்டு மணிக்கு எங்களுக்கு நாளை சோதனை இருக்கிறது என்கிற தகவல் மட்டும் கிடைத்தது. எங்கு, யார் என்பது குறித்து அப்போது சொல்லவில்லை. தமிழ்நாட்டில் இருந்து சில அதிகாரிகளும், கொச்சியிலிருந்து யூனிட்டும் இறக்கப்பட்டது. அடுத்த நாள் காலை எல்லோரும் அசம்பிளான பிறகு தான் செந்தில் பாலாஜி டார்கெட் என்பது தெரிய வந்தது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் கரூரில் சோதனையில் இறங்கினோம்.
டெல்லியிலிருந்து வந்த உத்தரவு:
இரவு வரை விசாரணை சென்று கொண்டிருந்தது. எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கைது இருக்கலாம் என்பது எங்கள் அனுமானமாக இருந்தது. ஏனென்றால் Rapid action force வந்ததும் நாங்களும் சுதாரித்துக் கொண்டோம். அதன்படி இரவு 11 மணிக்கு மேல் டெல்லியிலிருந்து எங்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டது. கைதுக்கான திட்டமிடல், சட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனைக்கு பிறகு இரவு 1:30-க்கு செந்தில் பாலஜியிடம், ‘ உங்களை கைது செய்கிறோம்…’ என்று சொல்கிறோம். அதை தொடர்ந்து அவரது கரூர் இல்லத்துக்கும் கைது குறி`த்து தகவல் பரிமாறப்பட்டது.
`அய்யோ.. அம்மா நெஞ்சுவலி’
கைது குறித்த செய்து கேட்டு அதிர்ந்து போய் அமர்ந்தவரது கண்கள் தடதடத்தது. நெஞ்சை பிடித்துக் கொண்டு ‘அய்யோ… அம்மா…’ என்று சத்தம் போட்டதும், உடனே அங்கிருந்து ஓமாந்தூரார் அரசு மருத்துவமனைக்கு நள்ளிரவு 2:15 மணிக்கு அழைத்து சென்றோம். அருகில் உள்ள நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த, ஒரு நீதிபதியை தொடர்பு கொண்டோம். அவரோ, ‘இது அரசியல் ரீதியாக செல்லும்… காலை அழைத்து வாருங்கள்’ என்று சொல்லியதால், நுங்கம்பாக்கத்திலிருக்கும் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைப்பதுதான் எங்கள் திட்டம். ஆனால், உடல் நிலை காரணமாக இப்போது மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறோம்” என்கிறார்கள்.
மருத்துவமனை அனுமதிக்கு பிறகு:
மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலஜியின் உடல் நிலை பரிசோதிப்பதற்காக டெல்லி எய்ம்ஸிலிருந்து மருத்துவ குழு வருகிறார்கள். அவர்கள் கொடுக்கும் அறிக்கைக்கு பிறகு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் இருக்கும். இவரது உடல் நிலை ஆரோக்கியமான பிறகு அண்டை மாநிலத்தில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருக்கிறார்கள். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், எ.வ.வேலு, கே.என் நேரு, சேகர் பாபு, பொன்முடி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வந்து சென்றிருக்கிறார்கள். இரவு வந்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்னும் அங்கேதான் இருக்கிறார். ஐ.சி.யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை யாரும் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இப்போது வரைக்கும் Rapid action force கட்டுப்பாட்டில் செந்தில் பாலாஜி இருக்கிறார்.
முதல்வர் வீட்டில் ஆலோசனை:
கைது குறித்தும், இனி அடுத்து என்ன செய்ய போகிறோம், செந்தில் பாலாஜிக்கு பதில் அவரது துறை யாருக்கு கொடுக்கலாம் என்பது குறித்தும் விடியற்காலை நான்கு மணியிலிருந்து முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை நடைப்பெற்று வருகிறது.