சூர்யாவின் `கங்குவா’ படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலைத் தொடர்ந்து சென்னையில் மீண்டும் தொடங்குகிறது. இன்னொரு பக்கம், படத்தின் முன்னோட்ட வீடியோ பிரமாண்டமாகத் தயாராகி வருகிறது. படம் பத்து மொழிகளிலும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ள நிலையில், இதன் படப்பிடிப்பு குறித்தும் புரொமோ வீடியோவின் நிலவரம் குறித்தும் விசாரித்தேன்.
‘அண்ணாத்த’ சிவாவின் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் ‘கங்குவா’ 3டி தொழில்நுட்பத்தில் பிரமாண்டமாக பத்து மொழிகளில் தயாராகிவரும் படம். சூர்யாவின் மற்ற படங்களைவிட இரு மடங்கு பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வருகிறது.
இதில் சூர்யா பல விதமான தோற்றங்களில் வருகிறார். இதன் மோஷன் போஸ்டர் வீடியோவில்கூட அரந்தர், வெண்காட்டர், மண்டாங்கர், முக்காட்டர், பெருமனத்தார் என ஒவ்வொரு லுக்கின் பெயர்களும் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தன. கொடைக்கானலில் நடந்த படப்பிடிப்புக்குப் பின், உடல் எடை அதிகரித்த சூர்யாவின் புகைப்படங்கள் வைரலாகின.
சென்னை, கோவா, எண்ணூர், கொடைக்கானல் ஆகிய இடங்களைத் தொடர்ந்து மீண்டும் சென்னையில் ஈ.வி.பி ஸ்டூடியோவில் வருகிற 19-ம் தேதி ஷூட்டிங் நடக்கிறது. கொடைக்கானல் ஷெட்யூல் படப்பிடிப்பு போய்க் கொண்டிருந்த போதே, ஈவிபியில் அரங்கம் அமைக்கும் பணிகளும் நடந்து வந்தன. அந்தப் பணிகள் நிறைவடைந்துவிட்டதால், மீண்டும் படப்பிடிப்பு தொடங்குகிறது. சூர்யா, திஷா பதானி காம்பினேஷனில் பாடல் காட்சி ஒன்றை இங்கே படமாக்க உள்ளதாகச் சொல்கிறார்கள்.
இதனிடையே சூர்யா அடுத்து சுதா கொங்கராவின் படத்தில் நடிக்க உள்ளார் என்ற பேச்சு இருக்கிறது. இந்தக் காரணத்தால் சூர்யா ஏற்கெனவே கமிட்டான வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ எப்போது தொடங்கும் என்பது குறித்து விசாரித்தால், இதற்கான விடை வெற்றிமாறனிடம்தான் இருக்கிறது என்கிறார்கள். வெற்றிமாறன் இப்போது ‘விடுதலை பாகம் 2’ படப்பிடிப்பில் இருக்கிறார். இந்தப் படத்தை முடித்துவிட்டுத்தான் ‘வாடிவாசல்’ படத்தை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.
‘கங்குவா’ படப்பிடிப்பு சென்னையைத் தொடர்ந்து அடுத்து கொடைக்கானலில் மீண்டும் தொடங்குகிறது. அத்துடன் படப்பிடிப்பு நிறைவடையவில்லை. கொடைக்கானல் ஷெட்யூலை முடித்துவிட்டு மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடக்கலாம் என்கின்றனர். அதன்பிறகு ‘கங்குவா’ மொத்த படப்பிடிப்பும் நிறைவடைவதற்குள் ‘விடுதலை பாகம் 2’ படத்தையும் வெற்றி இயக்கி முடித்துவிட்டால், உடனே ‘வாடிவாசல்’ படத்தை ஆரம்பிப்பது உறுதி என்கிறார்கள்.
சுதா கொங்கரா இந்தி `சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் சூர்யாவை இயக்குகிறார் என்பது உறுதியான தகவல்தான். சூர்யாவின் 2டி நிறுவனம்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறது. ஏற்கெனவே கதை விவாதம் செய்ய சுதாவுக்கு அலுவலகமும் அமைத்துக் கொடுத்துவிட்டார் சூர்யா.
ஆனாலும், ‘கங்குவா’வை அடுத்து வெற்றிமாறன் ‘வாடிவாசலை’ தொடங்கிவிடலாம் எனச் சொன்னால், ‘வாடிவாசல்’ படப்பிடிப்புதான் முதலில் ஆரம்பிக்கும். வெற்றி தரப்பிலிருந்து க்ரீன் சிக்னல் வரவில்லை என்றால்தான், சுதாவின் படப்பிடிப்பு முதலில் தொடங்கும்.
இன்னொரு பக்கம், அடுத்த மாதம் சூர்யாவின் பிறந்தநாள் வருவதால், `கங்குவா’ படத்தின் புரொமோ வீடியோவும் அப்போது வருகிறது. அதுகுறித்த அசத்தல் அப்டேட்கள் விரைவில்…