Tamil Nadu Premier League 2023: டிஎன்பிஎல் தொடர் 2023 எனப்படும் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடர் ஜூன் 12ஆம் தேதி தொடங்கப்பட்டது. கோயம்புத்தூர், சேலம், திண்டுக்கல், திருநெல்வேலி உள்ளிட்ட நான்கு இடங்களில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
இந்த டிஎன்பிஎல் தொடரில், சென்னை சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ், லைகா கோவை கிங்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், ரூபி திருச்சி வாரியர்ஸ், சேலம் ஸ்பார்ட்டன்ஸ், சீசெம் மதுரை பாந்தர்ஸ் என 8 அணிகள் விளையாடுகின்றன. மொத்தம் 32 போட்டிகள என வரும் ஜூலை 12ஆம் தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.
அந்த வகையில், நேற்றிரவு கோயம்புத்தூர் எஸ்என்ஆர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது லீக் போட்டியில், நாராயணன் ஜெகதீசன் தலைமையிலான சென்னை சூப்பர் கில்லீஸ் அணி, அபிஷேக் தன்வர் தலைமையிலான சேலம் ஸ்பார்ட்டன்ஸ் அணியுடன் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் செய்த சென்னை அணி 217 ரன்களை குவித்தது. அதில் அதிகபட்சமாக பிரதோஷ் ரஞ்சன் பால் 88 ரன்களையும், நாராயணன் ஜெகதீசன் 35 ரன்களையும் எடுத்தனர். சேலம் பந்துவீச்சில் சன்னி சந்து 2 விக்கெட்டுகளையும், அபிஷேக் தன்வர், மோகித் ஹரிஹரன் ஆகியோர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
அடுத்து விளையாடிய சேலம் அணியின் தொடக்கம் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும், டவுன் தி ஆர்டரில் விளையாடிய முகமது ஆத்னான் கான் 15 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 1 பவுண்டரி என 47 ரன்களை எடுத்து ஆறுதல் அளித்தார். இருப்பினும், அந்த அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை எடுத்து 165 ரன்களை எடுக்க முடிந்தது. அதன்மூலம், 52 ரன்கள் வித்தியாசத்தில் சேலம் அணியை வீழ்த்தி சென்னை அணி தனது முதல் வெற்றியை அடைந்தது. சென்னை அணி பந்துவீச்சில் பாபா அபராஜித், ராக்கி, விஜூ அருள் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹரிஷ் குமார், ரஹில் ஷா, சிலம்பரசன் உள்ளிட்டோர் தலா 1 விக்கெட்டை எடுத்தனர்.
இந்த போட்டியில் குறிப்பிடத்தக்க விஷயம் என்றால், சேலம் அணியின் பந்துவீச்சின்போது நடந்தது. அதாவது, 20ஆவது ஓவரை வீசிய கேப்டன் அபிஷேக் தன்வர், அதன் கடைசி பந்தை 5 முறை வீசி 18 ரன்களை வாரி வழங்கினார். குறிப்பாக, கடந்த சீசனில் 22 விக்கெட்டுகளை வீழ்த்திய அபிஷேக், அதில் அதிக விக்கெட்டுகளை எடுத்தவர் அவர்தான்.
The most expensive delivery ever? 1 Ball 18 runs#TNPLonFanCode pic.twitter.com/U95WNslHav
— FanCode (@FanCode) June 13, 2023
என்ன நடந்தது?
– கடைசி பந்தை அவர் முதல் முறையாக வீசியபோது சஞ்சய் யாதவை போல்டாக்கி ஆட்டமிழக்கச்செய்தார். அது நோ-பால் என அறிவிக்கப்பட்டு 1 ரன் வழங்கப்பட்டது.
– இரண்டாவது முறை வீசிய பந்தை சஞ்சய் யாதவ் சிக்ஸ் அடிக்க, அதுவும் நோ-பால் கொடுக்கப்பட்டது. இதற்கு 7 ரன்கள் கொடுக்கப்பட்டது.
– மூன்றாவது முறை, சஞ்சய் யாதவ் 2 ரன்கள் எடுக்க அதுவும் நோ-பால் என அறிவித்து, 3 ரன்கள் வழங்கப்பட்டது.
– நான்காவது முறை அவர் வைடாக போட, இதுவரை 12 ரன்கள் எடுக்கப்பட்டது.
– ஐந்தாவது முறை அவர் சரியாக போட்ட நிலையில், அதை சஞ்சய் யாதவ் சிக்ஸ் அடிக்க மொத்தம் 18 ரன்கள் குவிக்கப்பட்டது.
“கடைசி ஓவரின் பழியை நான் ஏற்க வேண்டும். நான்கு நோ-பால்கள் என்பது ஒரு மூத்த பந்துவீச்சாளராக ஏமாற்றத்தை அளித்தது. காற்று ஒரு முக்கிய பங்கை வகித்தாலும், அதுவும் உதவவில்லை,” என தோல்விக்கு பின் அபிஷேக் தன்வர் கூறினார்.