அதி தீவிர புயலான பிபர்ஜாய், அதிக சேதத்தை ஏற்படுத்தும் திறன் கொண்டது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதனையொட்டி மீட்பு நடவடிக்கைகளுக்காக முப்படைகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இன்று மாலை 4 முதல் 5 மணியளவில் குஜராத்தின் மாண்ட்வி – பாகிஸ்தானின் கராச்சி இடையே பிபர்ஜாய் புயல் கரையைக் கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குஜராத் கடலோர பகுதிகளில் வசித்துவந்த சுமார் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விலங்குகள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, ரயில்வே பாதுகாப்பு படை உள்ளிட்டவை தயாராக உள்ள நிலையில், மும்பை மற்றும் கோவாவிலிருந்து குஜராத் விரைய இந்திய கடற்படை கப்பல்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
புயல் தாக்கம் காரணமாக குஜராத்தின் கட்ச் கடற்பகுதியில் 2 முதல் 3 மீட்டர் உயரத்திற்கு அலைகள் எழலாம் என்றும், போர்பந்தர் மற்றும் துவாரகாவில் கடும் சூறாவளியுடன் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.