தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சமீபத்தில் ஆங்கில ஊடகத்துக்கு அளித்த பேட்டியொன்றில், முன்னாள் முதல்வர் ஒருவர் ஊழல் வழக்கில் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டார் என அ.தி.மு.க-வின் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை மறைமுகமாகக் குறிப்பிட்டது அ.தி.மு.க-வினரிடையே பெரும் எதிர்ப்பைக் கிளப்பியிருக்கிறது. அதைத் தொடர்ந்து அண்ணாமலைக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதையடுத்து அ.தி.மு.க-வுக்கு பா.ஜ.க-வும் கண்டனம் தெரிவித்தது. இத்தகைய மோதல் போக்கு காரணமாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி உடைகிறதா என்றெல்லாம் பேச்சுகள் எழுந்தன.
அதன் தொடர்ச்சியாக அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி குறித்து விகடன் வலைதளப் பக்கத்தில் வாசகர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
அதில், `ஜெயலலிதா குறித்த அண்ணாமலையின் பேச்சு அ.தி.மு.க-வினரைக் கொந்தளிக்கச் செய்திருக்கிறது. இனி அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி என்னவாகும்?’ எனக் கேள்வி கேட்கப்பட்டு, `தொடரும், முறியும், தேர்தல் நேரத்தில் தெரியவரும்’ என்று மூன்று விருப்பங்கள் தரப்பட்டிருந்தன.
இந்த நிலையில் கருத்துக்கணிப்பு முடிவுகளின்படி, அதிகபட்சமாக `46 சதவிகிதம் பேர்’ அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி தொடரும் என்று தெரிவித்திருக்கின்றனர். அதற்கடுத்தபடியாக, `36 சதவிகிதம் பேர்’ தேர்தல் நேரத்தில் தெரியவரும் என்றும், `18 சதவிகிதம் பேர்’ கூட்டணி முறியும் என்று தெரிவித்திருக்கின்றனர்.
இதே போன்று விகடன் வலைதளப் பக்கத்தில், `செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைதுசெய்திருப்பது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் செயல்’ என முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது குறித்து கருத்துக்கணிப்பு நடந்துவருகிறது. இதில் கலந்துகொள்ள பின்வரும் லிங்க்கை க்ளிக் செய்யவும்… https://www.vikatan.com/