அனைத்திற்கும் கருணாநிதி பெயர் வைத்தால் தமிழ் நாடு என்னவாகும்? – ஆர்.பி.உதயகுமார் ஆதங்கம்.!!
தமிழகத்தில், மருத்துவமனை, விளையாட்டு அரங்கம், பேருந்து நிலையம் என்று அனைத்திற்கும் கருணாநிதியின் பெயரைச் சூட்டும் ஸ்டாலினின் செயலைக் கண்டு தமிழக மக்கள் முகம் சுளிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில்,” திமுக அரசின் நிர்வாக குளறுபடி மற்றும் சட்டஒழுங்கு சீர்கேட்டால் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது. தமிழக விளையாட்டு வீரர்கள் தேசிய விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க முடியாத சூழலில் வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமி ஆட்சி காலத்தில் வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கு மூன்று சதவீத இடஒதுக்கீடு அளித்து அரசாணை வெளியிட்டார். ஆனால், ஸ்டாலினோ உயர்தர சிறப்பு மருத்துவமனைக்கு கருணாநிதி பெயரைச் சூட்டுகிறார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமி உருவாக்கிய பேருந்து நிலையத்திற்கு கருணாநிதி பெயர் வைக்கிறார். மதுரையில் நூலகத்திற்கு கருணாநிதி பெயரை வைக்கிறார். கடலில் கருணாநிதிக்கு நினைவுச் சின்னம் அமைக்க முயற்சிக்கிறார். சேப்பாக்கம் மைதானத்தில் கருணாநிதி பெயரில் அரங்கம். இப்படியே போனால் தமிழ்நாடு என்னவாகும்? இதை பார்த்து பொதுமக்கள் முகம் சுளிக்கிறார்கள்.
அதுவே, எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆரின் பெயரைச் சூட்டினார். மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்திற்கு எம்.ஜி.ஆர் பெயரை வைத்தார். இந்தச் செயல் தலைவருக்கு விசுவாசம் உள்ள ஒரு தொண்டர் செய்யும் மரியாதையாகும். ஆனால், ஸ்டாலின் செய்வதோ தந்தைக்கு மகன் செய்யும் கடமையாகும்.
நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் ஆறு பேர் முதலிடத்தில் வந்திருப்பது மகிழ்ச்சி. ஆனால், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீட் தேர்வில் தமிழகத்தில் தேர்வானவர்கள் சதவீதம் குறைவு. தமிழக மாணவர்கள் திறமை உள்ளவர்கள். ஆனால், அவர்களை தமிழக அரசு ஊக்கப்படுத்தவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.