காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் முழுமையாக நிற்கும் வரை பிரார்த்தனையை செய்வதாக அறிவித்து தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஜடேஜா.
குஜராத் மாநிலம் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரத்யுமன் சிங் ஜடேஜா. பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்படும் மக்களை மீட்பது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? என அரசும், அதிகாரிகள், பிற சட்டமன்ற உறுப்பினர்களும் ஈடுபட்டு இருக்க இவர் வித்தியாசமான யுக்தியை கையில் எடுத்து உள்ளார்.
அதன் மூலமாக மற்ற பாஜக எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களை விட தற்போது டிரெண்டாகி உள்ளார். அவர் கையில் எடுத்து அந்த யுக்திதான் பிரார்த்தனை. ஆம், பைபர்ஜாய் புயல் முழுமையாக நிற்கும் வரை தன்னுடைய அலுவலகத்திலேயே பிரார்த்தனை செய்யப்போவதாக அறிவித்து அதில் ஈடுபட்டு வருகிறார்.
புயலால் குறைவான பாதிப்புகளே ஏற்பட வேண்டும் என வேண்டி கைகளில் மாலையையும் ஏந்தி இருக்கிறார். இந்த நிலையில், பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்தது. வடகிழக்கே நகர்ந்து சென்ற பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா – கட்ச் வளைகுடா பகுதியில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 – 125 கிலோ மீட்டர் வேகத்தில் இரவு 10.30 மணி முதல் 11.30 மணிக்குள் கடந்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து இருக்கிறது.
குஜராத் மீட்புத் துறை ஆணையர் அலோக் பாண்டே இதுபற்றி தெரிவிக்கையில், “பைபர்ஜாய் புயல் சவுராஷ்டிரா – கட்ச் வளைகுடாவை கடந்து சென்று தற்போது பாகிஸ்தான் – கட்ச் வளைகுடா அருகே உள்ளது. அதன் சராசரி காற்று வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது. புயலின் காரணமாக மின் தடை ஏற்படலாம்.
வானிலை ஆய்வு மையம் விடுத்து இருக்கும் அறிவிப்பில், பைபர்ஜாய் புயல் தெற்கு ராஜஸ்தானை சென்றடையும். இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருக்கிறது. திடீர் வெள்ளம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. குஜராத்தின் பரவலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.
எனவே குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் புயல் கரையை கடந்தாலும் அதன் கண் பகுதி பாகிஸ்தான் – கட்ச் வளைகுடா அருகே நிலைபெற்று உள்ளதுடன், ராஜஸ்தான் நோக்கி நகர்ந்து உள்ளது. எனவே புயல் முழுமையாக ஓய்வதற்கு இன்னும் பல மணி நேரம் ஆகும் என்று கூறப்படும் நிலையில், பிராத்தனையை தொடங்கிய குஜராத் பாஜக எம்.எல்.ஏ. ஜடேஜா என்ன முடிவெடுப்பார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.