புற்றுநோயால் இறந்த துணை நடிகர் பிரபுவுக்கு இறுதி அஞ்சலியையும் இறுதிச் சடங்கையும் இசையமைப்பாளர் டி.இமான் செய்த காட்சி, இணையத்தில் வெளியாகி நெகிழ வைத்திருக்கிறது.
பிரபுவின் சொந்தங்களும் பந்தங்களும் இறுதிச் சடங்குகளைச் செய்ய முன்வராத போது, இமான் முன்வந்து ஒரு சகோதரர் மாதிரி அக்கறையுடன் செய்தார். இத்தகைய மனிதாபிமான செயல் குறித்து டி.இமானிடம் பேசினேன்.
”கல்வி உதவி செய்வதற்காக கடந்த 2020ல் டிரெஸ்ட் ஒண்ணு ஆரம்பிச்சேன். அப்புறம் மருத்துவ உதவிகளும் அவசியம்னு தெரிய வந்ததுச்சு. இறந்துபோன துணை நடிகர் பிரபுவை எனக்கு அறிமுகப்படுத்தினவர் சமூக சேவகர் உமா தான். ஆறு மாசத்துக்கு முன்னாடி அவரை எனக்கு அறிமுகப்படுத்தினாங்க.
தங்குறதுக்கு வீடு வாசல் இல்லாமல் கோயம்பேடு பஸ் ஸ்டாண்ட்ல பிரபு படுத்திருந்திருக்கார். நடிகர் சங்கத்தில் துணை நடிகருக்கான உறுப்பினர் கார்டு, ஆதார் கார்டு உட்பட அவரது அடையாள அட்டைகள் பஸ் ஸ்டாண்டில் திருடு போயிருக்கு. அதன் பிறகு அடையாளம் தெரியாத அளவுக்கு ஆளே மாறிப்போய், பஸ் ஸ்டாண்டிலேயே கிடந்திருக்கார். அப்பதான் அவர் சமூக சேவகர்கள் கண்ணுல பட்டிருக்கார். பிரபுவுக்குப் பூர்வீகம் பாண்டிச்சேரின்னு சொன்னாங்க. அவருக்கு அண்ணன் தம்பிகள் இருந்தும் யாரும் அவரோடு தொடர்பில் இல்லைன்னு அவங்களுக்குத் தெரியவந்திருக்கு. பிரபுவோட நண்பர் பழனியப்பன் என்பவர் மூலமா, ‘இவர் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் பிரபு, ‘படிக்காதவன்’ உட்பட, நிறைய படங்கள்ல நடிச்சவர்’னு உமாவுக்குத் தெரிய வந்தது.
பிரபுவை எனக்குத் தெரியவந்ததும், அவரை மருத்துவமனைக்கு அழைச்சிட்டுப் போனோம். ராமச்சந்திரா மருத்துவமனையில் தான் அவரை அனுமதித்தோம். அங்கே அவருக்கு வாய்ப்புற்று நோய் இருக்கறது தெரியவந்துச்சு. அதுவும் நாலாவது கட்ட கேன்சர்னு சொல்லிட்டாங்க. கீமோ தெரபி கொடுத்துப் பார்க்கலாம். தொடர்ந்து சிகிச்சையில் இருந்தார்னா, அதிக பட்சம் இன்னும் ரெண்டு வருஷம் உயிரோடு இருப்பார்’னாங்க. ஏன்னா நாலாவது கட்டத்துக்குப் பிறகு என்னதான் ட்ரீட்மென்ட் பண்ணினாலும் முற்றிலும் குணப்படுத்துவதற்கான சாத்தியம் இல்ல. அதனால இருக்கற வாழ்நாளை நீட்டிக்கலாம்னு நினைச்சு, கீமோ கொடுத்துப் பார்த்தாங்க. ஆரம்பத்துல அவரது உடல் கீமோ சிகிச்சைக்கு ஒத்துழைச்சது. ஆனால் அதன்பிறகு கீமோ பலனளிக்கல.
அவரது உடல் நிலை இன்னும் மோசமாச்சு. எனக்கு நேரம் கிடைக்கறப்ப ராமச்சந்திராவில் போய், பிரபுவைப் பார்த்துட்டு வருவேன். என்கூட உமாவும், பழனியப்பனும் வருவாங்க. ஏன்னா, பிரபுவுக்கு அங்கே பேச்சுத் துணைக்குக்கூட ஆளில்லாமல் அவதிப்பட்டார். இந்நிலையில் அவருக்கு கீமோ கொடுக்க ஆரம்பிச்சா, அதுவே அவரது உயிருக்கு ஆபத்தாகிடும்னு தெரிய வந்துச்சு. சரி, ஒரு ஹோம்ல வச்சு அவரைப் பார்த்துக்கலாம்னு நினைச்சோம். எனக்குத் தெரிஞ்ச ‘நேத்ராலயா’ ஹோம்ல அவரை சேர்க்கலாம்னு நினைச்சேன். அது உடல் ஊனம் மற்றும் பார்வையற்றவர்களைப் பராமரித்து வரும் ஹோம் அது. நான் சொன்னதால, புற்றுநோயாளியால் அவதிப்பட்ட பிரபுவை அவங்க இல்லத்தில் சேர்த்து கவனிச்சுக்கிட்டாங்க. அங்கே ஒரு மாசம் இருந்திருப்பார். அதன் பிறகு ராமச்சந்திராவுக்கு சிகிச்சைக்கு அழைச்சிட்டுப் போகும் போதுதான் கேன்சர் நோயாளிகளைப் பராமரிக்கும் இல்லமான ‘ஜீவோதயா’ பத்திச் சொன்னாங்க. அது ரெட் ஹில்ஸ் பக்கத்துல உள்ள மாத்தூர்ல இருந்தது. சகோதரி லலிதாதான் அதைப் பார்த்துக்கிறாங்க. அங்கேயே நிறைய கேன்சர் நோயாளிகள் இருக்காங்க. அவங்களோட இறுதிக்காலம் வரை அங்கேயே இருக்கலாம். அங்கே கொண்டு சேர்த்தோம். அங்கேயே அவர் மூணு மாசம் இருந்திருப்பார். அடிக்கடி அவரைப் போய்ப் பார்த்தோம்.
நேத்துக் காலையில அவர் தவறிட்டதாகச் செய்தி கேள்விப்பட்டதும், மனசு கஷ்டமாகிடுச்சு. உடனே நேத்ராலயாவில் உள்ள ஆட்களையும், உமா, பழனியப்பன் அவங்களையும் வரச் சொல்லிட்டு அங்கே போனேன். மொத்தமே அஞ்சு பேர்தான் போயிருந்தோம். அதுல ஒருத்தர் பார்வையற்றவர். அப்புறம் மாத்தூர்ல இருக்கற மயான பூமியிலேயே அவரது இறுதிச் சடங்கைப் பண்ணலாம்னு முடிவு செய்தோம். பிரபு இந்து என்பதால் அவரது முறைப்படியே செய்ய நினைத்தோம். இறுதிச் சடங்கு முறைகளை எல்லாம் உமா செய்தாங்க.
கடந்த ஆறு மாசமா, பிரபுவை நான்தான் கவனிச்சிட்டிருக்கேன். இந்த ஆறு மாசத்துல அவரை விசாரிச்சு, ஒருத்தர்கிட்ட இருந்துகூட எனக்கு எந்த போனும் வந்ததில்ல. அவர் மருத்துவமனை, ஹோம்னு இருந்தப்பகூட யாரும், அவரின் நண்பர்கள்னு சொல்லி வந்து நலம் விசாரிச்சதில்ல. யாருக்குமே இப்படி ஒரு நிலை வரக்கூடாது. பிரபுவை நல்ல முறையில் அவரது சம்பிரதாயத்தோடு இறுதி அஞ்சலியும் மரியாதையும் செலுத்திட்டோம். அவர் வலியும் வேதனையுமா இருந்து கஷ்டப்படுறதைவிட, அவர் இறந்தது ஒரு விதத்துல அவருக்கு நல்லதுன்னுதான் நினைக்க வேண்டியிருக்கு” – கண்களில் ஈரம் கசிய துயரில் ஆழ்கிறார் இமான்.