சென்னை:
அமைச்சர் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டிருந்த ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் அமைச்சர் சேகர் பாபுவின் ஆதரவாளருக்கும், சிஆர்பிஎப் துணை ராணுவப் படை வீரருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்படும் சூழல் நிலவியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்ததன் பேரில் அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு, செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்றார்.
அப்போது அவருடன் வந்த அவரது ஆதரவாளரும், வழக்கறிஞருமான ஒருவரை சிஆர்பிஎப் போலீஸார் தடுத்து நிறுத்தி உள்ளே செல்ல அனுமதி மறுத்தார். அப்போது வழக்கறிஞர் நான் அமைச்சருடன் வந்திருக்கிறேன் என்று கூற, நீங்கள் யாராக இருந்தாலும் அடையாள அட்டையை காண்பித்துவிட்டு தான் உள்ளே செல்ல வேண்டும் என சிஆர்பிஎப் வீரர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வழக்கறிஞர், “நீ யார் என்னை தடுக்குறதுக்கு.. இது மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனை. நீ யார் என்னை போகக் கூடாதுனு சொல்வதற்கு” என ஒருமையில் பேசினார்.
அதற்கு சிஆர்பிஎப் வீரர், “என்ன சார் நீ யாருனு கேக்குறீங்க. நான் போலீஸ் சார். என் கடமையை தான் நான் செய்கிறேன்” என மரியாதையாக கூறினார். ஆனாலும், அந்த வழக்கறிஞர் தொடர்ந்து ஒருமையில் அவரை திட்ட, பொறுமையிழந்த சிஆர்பிஎப் வீரரும் வழக்கறிஞரை ஒருமையில் பேச ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த வழக்கறிஞர், “என்னையே நீ, வா, போ என பேசுவியா..” என கேட்க, நீ அப்படி பேசினால் நானும் அப்படிதான் பேசுவேன்” என சிஆர்பிஎப் வீரர் கூறினார்.
ஒருகட்டத்தில் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியதில், “என்ன.. அடிச்சுருவியா அடிச்சுருவியா அடி பார்ப்போம்” என வழக்கறிஞர் சிஆர்பிஎப் வீரரை நெருங்க, நிலைமை கைமீறப் போவதை உணர்ந்த மற்ற சிஆர்பிஎப் வீரர்கள், அவர்கள் இருவரையும் விலக்கி விட்டனர். பின்னர், சம்பந்தப்பட்ட சிஆர்பிஎப் வீரரை அவர்கள் மருத்துவமனைக்கு உள்ளே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் கத்திவிட்டு அங்கிருந்து வழக்கறிஞர் வெளியேறினார்.