"கட்டை விரலை எடுத்துட்டாங்க; பொண்டாட்டி, புள்ளகுட்டி இருந்திருந்தா…" – பாவா லட்சுமணன் வருத்தம்

நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன், நீரிழிவு நோயால் கால் கட்டைவிரல் அகற்றப்பட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

‘வாம்மா… மின்னல்’ என்று வயிறுகுலுங்கச் சிரிக்க வைத்தவர். யாருக்காவது ஜாமின் கிடைக்கவில்லை என்றால்கூட ‘வாளமீன் இருக்குங்குறாங்க வஞ்சிர மீன் இருக்குங்குறாங்க. ஆனா, ஜாமீன் மட்டும் இல்லைங்குறாங்க’ என்கிற இவரது காமெடியைத்தான் மீம்ஸாக நெட்டிசன்கள் வைரலாக்குவார்கள். தற்போது, நீரிழிவு நோயினாலும் பொருளாதார நெருக்கடியினாலும் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கிறார். இந்நிலையில், சிகிச்சையில் இருக்கும் பாவா லட்சுமணனைத் தொடர்புகொண்டு பேசினேன்.

நடிகர் பாவா லட்சுமணன்

“சில வருடங்களாவே எனக்கு சுகர் பிரச்னை இருக்கு. சுகர் கன்ட்ரோல் மீறிப்போனதால, கடந்த பத்து நாளா ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கிட்டு வர்றேன். டாக்டருங்க டெஸ்ட் எல்லாம் எடுத்துப் பார்த்துட்டு ‘பாதிப்பு அதிகமாகிடுச்சு. கட்டை விரலை எடுத்தே ஆகணும்’ன்னு சொல்லிட்டாங்க. ஆபரேஷனும் பண்ணி விரலையும் எடுத்தாச்சு. ஆனா, அந்தக் காயம் சரியாகுறதுக்கு நாலஞ்சி மாசமாகும்.

ஏற்கெனவே வாழ்வாதாரத்துக்கு வழியில்லாம நண்பர்களோட உதவியாலதான் நாள்களைத் தள்ளிக்கிட்டிருக்கேன். ஆறு மாசமா பட வாய்ப்புகளும் கிடையாது. இப்போ, கட்டை விரலையும் எடுத்துட்டாங்க. இந்த வலியை விட வாய்ப்பு கிடைக்காததுதான் பெரிய வலி. காயம் எல்லாம் சரியான பிறகுதான் வாய்ப்பு தேடமுடியும். அதுவும் கிடைக்குமான்னு தெரியல. உதவுறதுக்கு என்னைப் பெத்தவங்களும் உசுரோட இல்ல. நடிகருங்கன்னா நிறைய சம்பளம் வாங்குறாங்கன்னு வெளில நினைக்குறாங்க. என்னை மாதிரி துணை நகைச்சுவை நடிகர்களோட சம்பளம் ரொம்பக் குறைவுதான். கம்பெனியைப் பொறுத்து அஞ்சாயிரத்திலிருந்து பத்தாயிரம் வரைக்கும் கொடுப்பாங்க. பட வாய்ப்புகளும் எப்பவாவதுதான் வரும்.

பாவா லட்சுமணன்

இந்தப் பணத்தை வெச்சிக்கிட்டு சென்னையில் எப்படி வாழ்க்கையை ஓட்டமுடியும்? சாப்பாட்டுக்கே கஷ்டப்படும்போது, தனியார் மருத்துவமனையெல்லாம் நினைச்சுக்கூடப் பார்க்கமுடியாது. அதனால்தான் அரசு மருத்துவமனையில் வந்து சேர்ந்தேன். இங்க நல்லா பார்த்துக்கிறாங்க. ஆனாலும், டிஸ்சார்ஜ் ஆனபிறகு மருந்து, மாத்திரைகள், சாப்பாட்டுச் செலவுன்னு ஏகப்பட்ட செலவு இருக்கு. எங்களை மாதிரி நலிவடைஞ்ச கலைஞர்களுக்கு திரைத்துறையினர்தான் உதவி செய்யணும்” என்று வேதனையுடன் கோரிக்கை வைத்தவரிடம் “உங்கள் மனைவி, பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்?” என்று கேட்டேன்.

“எனக்கு இப்போ 58 வயசாகுது. திருமணமே பண்ணிக்கல. புள்ள குட்டின்னு இருந்தா நான் ஏன் உதவி கேட்கப்போறேன். எனக்கு ஒரேயொரு அக்காதான் இருக்காங்க. அவங்களும் சொல்லிக்கிற மாதிரியெல்லாம் வசதி கிடையாது. அதனால்தான், திரைத்துறையினரிடம் உதவியை எதிர்பார்க்குறேன்” என்கிறார் உருக்கமாக.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.