அகமதாபாத்: அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்க தொடங்கியது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர்.
தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. பின்னர் புயலாகவும் மாறிய நிலையில் இதற்கு ‘பைபர்ஜாய்’ என பெயரிடப்பட்டது. இந்த பைபர்ஜாய் புயலானது தீவிர புயலாகவும், அதிதீவிர புயலாகவும் உருவெடுத்தது.
இது வடகிழக்கு திசையில் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கொங்கன், கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளை கடந்து குஜராத் நோக்கி முன்னேறியது. இதன் காரணமாக கடந்த ஓரிரு நாட்களில், இப்பகுதிகளில் 135 முதல் 145 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசியது. மேலும் பல்வேறு இடங்களில் கனமழையும் பெய்தது. பொதுவாக ஒரு புயல் உருவானால் அது, தன்னை சுற்றியுள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி எடுத்துக்கொள்ளும். அதேபோல பைபர்ஜாய் புயலும் தென்னிந்தியாவில் நிலவிய ஈரப்பதத்தை எடுத்துக்கொண்டது.
இதன் காரணமாக தென்மேற்கு பருவ மழையானது தள்ளி போயுள்ளது. ஏற்கெனவே கேரளாவில் பருவமழை தாமதமாக தொடங்கும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், புயல் இம்மழையை மேலும் தாமதமாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த புயல் அதிதீவிர நிலையிலிருந்து தீவிர நிலைக்கு வலுவிழந்தது. இந்த நிலையில் இன்று மாலை குஜராத்தில் உள்ள மாண்ட்விக்கும், பாகிஸ்தானின் கராச்சிக்கும் இடையே புயல் கரையக் கடக்க தொடங்கியது.
புயல் முழுவதுமாக கரையை கடந்து முடிக்க நள்ளிரவு தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் குஜராத் கடலோர பகுதிகளில் கனமழை கொட்டி வருகிறது. முன்னதாக புயல் அச்சுறுத்தலால் கடலோர மாவட்டங்களிலிருந்து சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணிகளை பொறுத்த அளவில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 18 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையினர் 12 குழுக்கள் தயார் நிலையில் இருக்கின்றனர்.
அதேபோல புயலால் ஏற்படும் சேதங்களை உடனடியாக சரி செய்ய, மாநில மின்சாரத்துறையின் சார்பில் 397 குழுக்கள், மாநில சாலை மற்றும் கட்டுமான துறையின் சார்பில் 115 குழுக்கள் தயார் நிலையில் இருப்பதாக மாநில அரசு அறிவித்திருக்கிறது. புயலை எதிர்கொள்வது குறித்து மாநில தலைமை செயலாளர் மற்றும் அவசரக்கால நடவடிக்கை மையத்தின் உயர் அதிகாரிகளுடன் முதல்வர் பூபேந்திர படேல் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். இது தவிர மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா நேரில் சென்று மீட்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டிருக்கிறார்.
மேலும், முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை மேற்கொண்டிருந்தார். தற்போதைய நிலவரத்தை பொறுத்த அளவில், துவாரகா, ஜாம்நகர், ஜுனாகத், போர்பந்தர் மற்றும் ராஜ்கோட் ஆகிய மாவட்டங்களில் பெரும் மழை பெய்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்த பகுதிகளில் சுமார் 50 மி.மீ அளவுக்கு மழை பெய்திருக்கிறது. மணிக்கு 130 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.