காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவில் உள்ள ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்தது.
அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கட்ச் – சவுராஷ்டிரா வளைகுடாவை கடந்ததாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. வடகிழக்கே நகர்ந்து சென்ற பைபர்ஜாய் புயல் சௌராஷ்டிரா – கட்ச் கடற்பகுதியை ஜகாவு துறைமுகம் அருகே மணிக்கு 115 முதல் 125 கிலோ மீட்டர் வேகத்தில் இரவு 10.30 முதல் 11.30 மணிக்குள் கடந்து இருப்பதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது.
புயல் கரையை கடந்ததன் காரணமாக குஜராத்தின் கட்ச் மற்றும் சவுராஷ்டிராவின் கடலோர பகுதிகளில் கடுமையான காற்றுடன் மழை கொட்டித் தீர்த்தது. பல இடங்களில் மரங்கள் வேறோடு முறிந்து விழுந்துள்ளன. மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து குஜராத் மீட்புத் துறை ஆணையர் அலோக் பாண்டே தெரிவிக்கையில், “சவுராஷ்டிரா – கட்ச் வளைகுடாவை கடந்து சென்ற பைபர்ஜாய் புயல் தற்போது பாகிஸ்தான் – கட்ச் வளைகுடா அருகே உள்ளது. தற்போது அதன் சராசரி காற்று வேகம் மணிக்கு 70 கிலோ மீட்டராக குறைந்து இருக்கிறது. இதன் காரணாமாக மின் தடைகள் ஏற்படலாம்.
வானிலை ஆய்வு மையம் விடுத்து உள்ள தகவலின்படி, இந்த புயல் தெற்கு ராஜஸ்தானை இன்று அடையும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திடீர் வெள்ளம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. குஜராத்தின் பரவலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல இடங்களில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருக்கின்றன. மீட்புப் பணிகளையும் மாநில அரசு தொடர்ந்து வருகிறது, ஆயிரக்கணக்கான மரங்கள், மின்கம்பங்கள் முறிந்து விழுந்திருப்பதாக செய்திகள் வருகின்றன. கடலோர குஜராத் பகுதியின் நிலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சரிடம் கேட்டறிந்தார்.