கோவை: திமுக அமைப்புச் செயலாளரும், முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மிக மிக நெருக்கமானவருமான அன்பகம் கலை, கோவையில் முகாமிட்டு நாளை நடைபெறவுள்ள கண்டன பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகளை கவனித்து வருகிறார்.
அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது மருத்துவமனை சிகிச்சையில் உள்ள நிலையில், நாளை கோவையில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் அவசர அறிவிப்பு ஒன்று வெளியானது.
இதையடுத்து அன்பகம் கலையை கோவைக்கு சென்று ஏற்பாடுகளை கவனித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி ஸ்டாலின் அனுப்பி வைத்திருக்கிறார். கோவை மாநகர திமுக செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக்கை பொறுத்தவரை அண்மையில் தான் இதய அறுவை சிகிச்சை கொண்டார்.
அதேபோல் கோவை தெற்கு, வடக்கு மாவட்ட திமுக செயலாளர்களாக இருக்கும் தொண்டாமுத்தூர் ரவிக்கும், தளபதி முருகேசனுக்கும் போதிய அனுபவின்மையால் அவர்கள் பொதுக்கூட்டத்தை சொதப்பிவிடுவார்களோ என்ற ஐயத்தில் தான் அன்பகம் கலை களமிறக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை பொறுத்தவரை கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சர் என்பதால் கோவையில் வைத்து கண்டனப் பொதுக்கூட்டத்தை நடத்துகிறது திமுக தலைமை. இதில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் பங்கேற்கின்றனர்.
உங்களுக்காக நாங்கள் இருக்கிறோம், தைரியமாக இருங்கள் என அமைச்சர் செந்தில்பாலாஜிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் நம்பிக்கை அளிக்கும் வகையில் இந்த கண்டனப் பொதுக்கூட்டத்தை முன்னெடுத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். நேற்று மாலை வரை சென்னையில் இருந்த கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் இரவோடு இரவாக கோவை புறப்பட்டு வந்துவிட்டனர்.
கோவை சிவானந்த காலனியில் உள்ள 100 அடி சாலையை பார்வையிட்ட அன்பகம் கலை, பொதுக்கூட்ட ஏற்பாடுகள் குறித்த அப்டேட்களை அவ்வப்போது முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கு கொண்டு செல்கிறார்.