மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் கேட்டு தாக்கலான மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் 2020-ல் சாத்தான்குளம் போலீஸாரால் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டு உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ கொலை வழக்கு பதிவு செய்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகு கணேஷ் மற்றும் ஒரு சிறப்பு சார்பு ஆய்வாளர், 5 காவலர்களை கைது செய்தது.
இந்த வழக்கு மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. விசாரணையை விரைவில் முடிக்கக்கோரி ஜெயராஜ் மனைவி செல்வராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை ஏற்று விசாரணையை முடிக்க கீழமை நீதிமன்றத்துக்கு காலக்கெடு விதித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த காலக்கெடு இரு முறை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில் மதுரை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் சார்பில் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தந்தை, மகன் கொலை வழக்கை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் கோரப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி கே.முரளிசங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
சிபிஐ தரப்பில், இதுவரை 47 பேர் விசாரிக்கப்பட்டுள்ளனர். மருத்துவர், நீதித்துறை நடுவர் உட்பட 6 பேரை விசாரிக்க வேண்டும். தற்போது நீதிபதி பணியிடம் காலியாக உள்ளது. நீதிபதி நியமிக்கப்பட்டதும் 3 மாதத்தில் விசாரணை முடிக்கப்படும். எனவே அவகாசம் வழங்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து விசாரணையை ஜூன் 22க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.