செந்தில் பாலாஜிக்கு 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவல்… ஓமந்தூரார் மருத்துவமனைக்கு நேரில் சென்ற நீதிபதி அல்லி!

தமிழகத்தில் இன்று காலை முதல் தலைப்பு செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பவர் அமைச்சர் செந்தில் பாலாஜி. பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் அடிப்படையில் இன்று அதிகாலை அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஆனால் அடுத்த சில நிமிடங்களில் நெஞ்சு வலி ஏற்பட ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ஆட்கொணர்வு மனு தாக்கல்

இவரை முதலமைச்சர்

, அமைச்சர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் எனப் பலரும் நேரில் சென்று பார்வையிட்டனர். இதற்கிடையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து செந்தில் பாலாஜியின் மனைவி பரபரப்பிற்கு ஆளாக்கினார். சட்ட வல்லுநர்கள் உடன் ஆலோசித்து அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சில முடிவுகளை எடுத்துள்ளார்.

செந்தில் பாலாஜிக்கு ஆதரவு

தேசிய அளவில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக அரசியல் கட்சி தலைவர்கள் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். இந்நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி சற்று முன்பு நேரில் வருகை புரிந்தார். அவருடன் அமலாக்கத்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள் உள்ளிட்டோரும் சென்றனர். அங்கு விசாரித்து உரிய விவரங்களை சேகரித்தார்.

அமைச்சரின் உடல்நிலை

அப்போது செந்தில் பாலாஜியிடம் துன்புறுத்தினார்களா? என்ற கேள்வியை நீதிபதி முன்வைத்திருந்தார். அதற்கு என்ன பதில் அளித்தார் எனத் தெரியவில்லை. இதுபற்றி விசாரிக்கையில், இருதரப்பு வழக்கறிஞர்கள் வாதங்களை நீதிமன்றத்தில் வைத்துக் கொள்ளுங்கள். செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து விசாரிக்கவே நீதிமன்றம் வந்ததாக நீதிபதி அல்லி தெரிவித்துள்ளார். அதன்பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

வரும் 28 வரை நீதிமன்ற காவல்

இந்நிலையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜிக்கு வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வாங்க திமுக தரப்பு முயற்சி எடுக்கும் எனத் தெரிகிறது.

கைது, நீதிமன்ற காவல் ஆகிய நடவடிக்கைகளால் செந்தில் பாலாஜியின் அமைச்சரவை பொறுப்பு, வேறு அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரத்த குழாயில் அடைப்பு

முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்டிருந்த ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம், 47 வயதாகும் அமைச்சருக்கு இன்று காலை 10.40 மணியளவில் இதய ரத்த நாள் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் மூன்று முக்கியமான ரத்த குழாய்களில் அடைப்பு உள்ளது கண்டறியப்பட்டது.

பை பாஸ் அறுவை சிகிச்சை

அதற்கு விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் காவிரி மருத்துவமனையில் நடந்து வருகின்றன. அங்கு அழைத்து செல்லப்பட்டு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளது. இதையொட்டி ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.