செந்தில் பாலாஜி உடல்நிலை எப்படி இருக்கிறது? ஓமந்தூரார் மருத்துவமனை லேட்டஸ்ட் அப்டேட்!

சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சு வலி காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். முன்னதாக அமலாக்கத்துறை ரெய்டு, அதிகாலையில் கைது என பரபரப்பான காட்சிகள் அரங்கேறின. அதன்பிறகு ஓமந்தூரார் மருத்துவமனையை சுற்றியே களம் நகர்ந்து கொண்டிருக்கிறது. ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாள பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

செந்தில் பாலாஜி கைது; புட்டு புட்டு வைத்த அண்ணாமலை!

செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை

அதில் மூன்று முக்கிய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டது. விரைவில் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதை ஐ.எஸ்.ஐ மருத்துவர்களும் உறுதி செய்தனர். இந்நிலையில் செந்தில் பாலாஜிக்கு பை பாஸ் அறுவை சிகிச்சை செய்ய காவேரி மருத்துவமனையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

நீதிமன்றத்தில் கோரிக்கை மனு

ஏனெனில் செந்தில் பாலாஜியின் மனைவி மற்றும் உறவினர்கள் இத்தகைய கோரிக்கை முன்வைத்துள்ளனர். காவேரி மருத்துவமனையில் தான் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

காவேரியா? ஓமந்தூராரா?

நீதிமன்றம் அனுமதி அளித்தால் காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். இல்லையெனில் ஓமந்தூரார் மருத்துவமனையிலேயே அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில் அதிநவீன வசதிகளுடன் பொதுமக்கள் பலரும் பை பாஸ் அறுவை சிகிச்சை செய்து வருகின்றனர்.

2வது நாளாக சிகிச்சை

எனவே அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்வதில் எந்தவித சிக்கலும் வராது எனக் கூறுகின்றனர். எவ்வளவு சீக்கிரம் அறுவை சிகிச்சை செய்ய வேண்டுமோ, அவ்வளவு சீக்கிரம் செய்ய வேண்டிய தேவை இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். தற்போது இரண்டாவது நாளாக ஓமந்தூரார் மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்று வருகிறார்.

உடல்நிலை சீராக உள்ளது

இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், உடல்நிலை சீராக இருக்கிறது. சுய நினைவுடன் உள்ளார். மருத்துவர்கள் ஆலோசனைப்படி உணவு, மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை இ.சி.ஜி, பல்ஸ் போன்றவற்றை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

90 சதவீத அடைப்பு

அதேசமயம் இதயத்தில் 90 சதவீத அடைப்பு இருக்கிறது. ரத்த நாளங்களில் வலது புறம் 90 சதவீதமும், இடதுபுறத்தில் 80 சதவீதமும் அடைப்பு உள்ளது. இருப்பினும் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.