மாநில அரசின் உயிர்நாடியாகக் கருதப்படும் தலைமைச் செயலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியிருப்பதை தற்போதைய முதலமைச்சர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையைக் கண்டித்தாரே தவிர, அன்று மாநில சுயாட்சி குறித்து பேசவில்லையே என்னும் விமர்சனமும் முன்வைக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக, தலைமைச் செயலகத்தில் வருமான வரித்துறை வருகை ’அன்று – எதிர்க்கட்சித் தலைவராக’ தமிழகத்துக்கு தலைகுனிவு, ’இன்று- முதலமைச்சராக’ அமலாக்கத்துறை வருகை மாநில சுயாட்சிக்கு எதிரானது என மாற்றி பேசியிருக்கிறார் ஸ்டாலின் என விமர்சனக்கள் முன் வைக்கப்படுகிறது.
அப்போது, அவர் பேசிய கருத்தகளாக சில தகவல்கள் சமூக வலைதளங்களில் உலாவி வருகிறது. அப்போது அவர் பேசியது என்ன என்பதை அறிய ட்விட்டர் கணக்கை நோட்டமிட்டோம்.
ஸ்டாலின் அன்று:
“ராமமோகன ராவ் சிக்கியுள்ள சூழலில், ஊழல் தொடர்புடைய “மேல்மட்ட” தலைவர்களும் எக்காரணத்தைக் கொண்டும் தப்பி விடக் கூடாது.
தமிழகத்தின் மாண்புக்கு சவால் விடும் வகையிலான வருமானவரித் துறை சோதனைகள் குறித்து முதல்வர் விரைந்து விரிவான அறிக்கையை வெளியிட வேண்டும்.
ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்கள், அதிகாரிகள், ஆட்சியை ஆட்டி வைப்பவர்கள் உள்ளிட்டோர் தப்பி விடக்கூடாது.
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தலைமைச் செயலாளர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்பது தமிழகத்தை தலைகுனிய வைத்துள்ளது.” இது போன்ற கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.
2016-ம் ஆண்டு வெளியிடப்பட்டதாக முதலமைச்சர் சொல்லும் அறிக்கையிலும், “வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியிருப்பது தமிழகத்துக்கான தலைகுனிவு. தமிழக நலன்களை புறக்கணித்து தங்கள் சொந்த லாபங்களுக்காக செயல்படும் அதிமுக அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் ஆளுங்கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் மீது கடுமையாகவும் வெளிப்படையாகவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். ஊழல் முறைகேடுகள் மூலம் லாபம் பார்த்த ஆட்சியாளர்களும் ஆட்சியை ஆட்டி வைப்பவர்களின் தப்பி விடக்கூடாது” என அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
அப்போது மாநில சுயாட்சி தொடர்பாக அவர் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. குறிப்பாக, 22 டிசம்பர் 2016-ம் ஆண்டு முரசொலியில் வெளியான செய்தியில், ‘இந்த சோதனை குறித்து மம்தா பானர்ஜி மாநில அரசின் உரிமையில் தலையிடுவதாக மாறுபட்ட கருத்தைத் தெரிவிக்கிறாரே?’ என்னும் கேள்விக்கு, மு.க ஸ்டாலின் இவ்வாறு பதிலளித்துள்ளார் .”மம்தா பானர்ஜி அவர்கள் டெல்லியில் நடந்த ரெய்டு பற்றி பேசுகிறார். அதற்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஆனால் இங்கு தொடர்ச்சியாக ரெய்டு நடைபெற்று வருகிறது அதைத்தான் நான் பேசி வருகிறேன்.” என்கிறார்.
இப்படியாக அதிமுக ஆட்சியை விமர்சித்திருக்கிறாரே தவிர ’மாநில சுயாட்சி’ குறித்தும் மத்திய அமைப்புகளின் அதிகாரம் குறித்தும் விமர்சிக்கவில்லை.
ஸ்டாலின் இன்று:
இந்த நிலையில் நேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி அலுவலகம் உள்ள தலைமைச் செயலகத்தில்தான் சோதனை நடந்திருக்கிறது. அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “கடந்த அ.தி.மு.க. ஆட்சியில், 2016-ஆம் ஆண்டு அன்றைய தலைமைச் செயலாளராக இருந்த ராம்மோகன் ராவ் அவர்களது வீட்டிலும், தலைமைச் செயலகத்திலும் வருமான வரித்துறை ரெய்டு நடத்தியது. “தலைமைச் செயலகம் என்பது மாநில அரசின் மூளை போன்ற முக்கியப் பகுதி. கூட்டுறவு – கூட்டாட்சி பேசிக் கொண்டே அந்த தலைமைச் செயலகத்தில் மத்திய போலீஸ் படையை அனுப்பி, தலைமைச் செயலாளராக இருந்த ராமமோகன்ராவ் அலுவலகத்துக்குள்ளேயே ரெய்டு நடத்துமாறு வருமான வரித்துறையை இயக்கியது ஒன்றிய அரசு. இது மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிரானது” என்று, அன்றைய ஆட்சியாளர்கள் கண்டிக்காமலும் கண்டுகொள்ளாமலும் இருந்தபோது, அதனைக் கண்டித்து நான் அறிக்கை வெளியிட்டேன். எனவே, யாருக்கு நடந்தது என்பதல்ல முக்கியம். எங்கு நடத்தப்பட்டது என்பதே முக்கியம். மிகத்தவறான முன்னுதாரணங்களைத் தொடர்ந்து பா.ஜ.க. உருவாக்கி வருகிறது”. இவ்வாறு தன் கண்டன அறிக்கையில் பதிவிட்டிருக்கிறார்.
ஆனால், அப்போது ’மாநில சுயாட்சி’ குறித்தும் தலைமை செயலகத்துக்குள் மத்திய அமைப்புகள் நுழைவதற்கு அதிகாரமில்லை என்னும் அடிப்படையில் அவர் கருத்து சொல்லவில்லை என்றே தெரிகிறது. அப்போது எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர் மத்திய அமைப்புகள் எதிராகக் கண்டனம் தெரிவிக்காத்தால், தற்போது இந்த நிலைக்கு தற்போது திமுக தள்ளப்பட்டிருப்பதாக குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. இதற்கு திமுக-வின் எதிர்வினையை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!