ஹைதராபாத்: தெலங்கானாவின் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த இரண்டு எம்ஏக்களின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடியாக ரெய்டு நடத்தியுள்ளனர். இந்த சம்பவம் அம்மாநிலத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய அரசின் புலனாய்வு/விசாரணை அமைப்புகள் சமீப நாட்களாக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் ரெய்டு நடத்தி அவரை கைது செய்தது, அதேபோல பிரபல ஆங்கில நாளிதழின் முன்னாள் உரிமையாளரான வெங்கட்ராம் ரெட்டியின் கைது ஆகியவை பேசு பொருளாகியுள்ளன.
இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக தெலங்கானாவில் ஆளும் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் எம்எல்ஏக்கள் இருவரின் வீடு மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறையினர் ரெய்டு நடத்தியுள்ளனர். இது அம்மாநிலத்தில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கர்னூலைச் சேர்ந்த மாரி ஜனார்தன் ரெட்டி மற்றும் போங்கீரின் பைலா சேகர் ரெட்டி ஆகியோரின் வீடுகளில்தான் ரெய்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதில், பிஆர்எஸ் மர்ரி ஜனார்தன் ரெட்டிக்கு ஜேசி பிரதர்ஸ் ரீடெய்ல் டெக்ஸ்டைல் ஷோரூம் மற்றும் ஜேசி பிரதர்ஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் சொந்தமானதாக இருக்கிறது. அதேபோல, ஜேசி பிரதர் புராஜெக்ட்ஸ், ஜேசி ஸ்பின்னிங் மில்ஸ் ஆகியவற்றிலும் இவரது ஷேர் இருக்கிறது. இவரது குடும்ப உறுப்பினர்களான மர்ரி ஷசிதர் ரெட்டி மற்றும் மர்ரி மதுமதி ஆகியோர் ஜே பிரதர்ஸ் ஹோல்டிங்ஸின் தற்போதைய இயக்குநர்களாக உள்ளனர்.
இந்நிலையில் இந்த நிறுவனங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரையடுத்து வருமான வரித்துறை களமிறங்கியுள்ளனர். நேற்று பிஆர்எஸ் மர்ரி ஜனார்தன் ரெட்டியின் வீடு, அலுவலகம், நிறுவனம் என அவருக்கு சொந்தமான 30க்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் ரெய்டில் இறங்கினர். இதில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதேபோல, பைலா சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரியல் எஸ்டேட் திட்டங்களில் வருமான வரி ஏய்ப்பு நடந்ததாக வந்த புகாரையடுத்து அவரது வீடு, அலுவலகங்கள் மற்றும் அவருக்கு சொந்தமான 30க்கும் அதிகமான இடங்களில் அதிகாரிகள் ரெய்டு நடத்தியுள்ளனர். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில், இந்த இரண்டு ரெய்டுகளும் பெரும் விவாதங்களை கிளப்பியிருக்கிறது.