விசாகப்பட்டினம்: திரைப்பட காட்சிகளைப் போல ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் 2 அதிரவைக்கும் கடத்தல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.பி.யாக இருப்பவர் எம்.வி.வி. சத்யநாராயணா. இவரது மனைவியும் மகனும் திடீரென மர்ம கும்பலால் கடத்தப்பட்டனர். இவர்களை விடுவிக்க அக்கடத்தல் கும்பல் ரூ1 கோடி பேரம் பேசியிருக்கிறது.
இதனையடுத்து ரூ1 கோடி பணத்துடன் எம்.பி.யின் ஆடிட்டர் கடத்தல் கும்பல் வர சொன்ன இடத்துக்கு சென்றது. ஆனால் பணத்தை பறித்துக் கொண்ட அக்கடத்தல் கும்பம் எம்.பி.யின் ஆடிட்டர் வெங்கடேஸ்வர ராவையும் தூக்கியது.
முதலில் எம்பி மனைவி- மகன்; அடுத்தது எம்பியின் ஆடிட்டர் என அடுத்தடுத்த கடத்தல் சம்பவங்களால் விசாகப்பட்டினம் போலீஸ் அதிர்ந்தது. ஆனால் அடுத்த 3 மணிநேரத்தில் ஒட்டுமொத்த கடத்தல் சம்பவமும் முடிவுக்கு வந்தது.
ஆடிட்டரிடம் கடத்தல்காரர்கள் பேசிய செல்போன் எண்கள், ஆடிட்டரின் மொபைல் எண் ஆகியவற்றை வைத்து எளிதாக கடத்தல் கும்பலை சேஸ் செய்து மடக்கியது போலீஸ். திரைப்படங்களை மிஞ்சக் கூடிய வகையிலான இக்கடத்தல் சம்பவத்தில் பெரும்பாலான நபர்கள் சிக்கிவிட்டனர். கடத்தல் கும்பலின் தலைவன் இன்னமும் சிக்கவில்லை. இச்சம்பவத்தில் போலீசார் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டிருக்கிறதாம்.
அதேநேரத்தில் எம்.பி.யின் மனைவி, மகன் எப்போது கடத்தப்பட்டனர்? அதை ஏன் எம்.பி. தரப்பு போலீசுக்கு சொல்லவில்லை என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறதாம்.
சினிமா சினிமாதான்!