பிப்பர்ஜாய் புயல் | குஜராத்தில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையைக் கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

புதுடெல்லி: அரபிக்கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா, கட்ச் மற்றும் பாகிஸ்தானை ஒட்டிய கடற்கரை பகுதிகளில் இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று காலை 2.15 மணிக்கு வெளியிடப்பட்ட அண்மைத் தகவல் இது.

புயல் முன்னேறி வரும் நிலையில் அது தொடர்பான முக்கியத் தகவல்கள் சில.. * தற்போது பிப்பர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 200 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் இடையே பாகிஸ்தானை ஒட்டி கரையைக் கடக்கும். அப்போது மணிக்கு 120 முதல் 130 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

* புயல் குஜராத் கடற்கரையை நெருங்க நெருங்க போர்பந்தர், ராஜ்கோட், மோர்பி, ஜுனாகத், சவுராஷ்டிரா உள்ளிட்டப் பகுதிகளில் கனமழை முதல் அதிகனமழை பெய்து வருவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன,

* புயலுக்குப் பின்னர் மீட்புப் பணிகளுக்காக தேசிய பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 18 குழுக்கள், மாநில பேரிடர் மீட்புப் படையைச் சேர்ந்த 12 குழுக்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் மாநில நெடுஞ்சாலைத் துறை, மின்சாரத் துறை ஊழியர்களும் மீட்புப் பணிகளுக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

* நாளை (ஜூன் 16) வரை துறைமுகப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. கப்பல்கள், மீன்பிடி படகுகள் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ளன.

* பயணிகள் பாதுகாப்பைக் கருதி மேற்கு ரயில்வே 76 ரயில்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரத்து செய்துள்ளது. அதேபோல் குஜராத்தின் பழம்பெரும் கோயில்களான துவாரக்தீஷ் கோயில் மற்றும் கிர் பகுதியில் உள்ள சோம்நாத் கோயில்கள் இன்று (வியாழக்கிழமை) மூடப்பட்டுள்ளன.

* ஏற்கெனவே பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பதிவிட்டுள்ள ட்வீட்டில், முப்படைத் தளபதிகளுடனும் பேசி மீட்பு, நிவாரணப் பணிகளுக்கு ஆயத்தமாக இருக்கக் கூறியுள்ளதாக பதிவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் ஏற்கெனவே தனித்தனியாக ஆய்வுக் கூட்டங்களை நடத்தி உரிய ஆலோசனைகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.

* பிப்பர்ஜாய் புயல் கரையைக் கடப்பதை முன்னிட்டு குஜராத் கடற்கரையை ஒட்டிய 164 கிராமங்களைச் சேர்ந்த 74 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 34,300 பேர் கட்ச் மாவட்டத்திலும், 10 ஆயிரம் பேர் ஜாம்நகரில் இருந்தும், 9,243 பேர் மோர்பியில் இருந்தும், 6,089 பேர் ராஜ்கோட்டில் இருந்தும், 5.035 பேர் தேவ்பூமி துவாரகாவில் இருந்தும், 4,604 பேர் ஜுனகத்தில் இருந்தும், 3.469 பேர் போர்பந்தரில் இருந்தும், 1,605 பேர் கிர் சோம்நாத் பகுதியில் இருந்தும் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

* மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவும், கச் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நேரில் சென்று ஆய்வு செய்தார். புஜ் விமானப்படை தளத்துக்குச் சென்ற அவர், மீட்புப் பணிகளுக்காக இந்திய விமானப் படையின் கருடா எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் குழுவின் தயார் நிலையையும் கண்டறிந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.