பி.எல்.சந்தோஷ்: தெற்கில் அடுத்த மெகா வியூகம்… ஒரே கல்லில் இரண்டு மாநிலங்கள்!

பாஜகவில் உச்சபட்ச அதிகாரம் கொண்ட அமைப்பாக நாடாளுமன்ற நிலைக்குழு திகழ்கிறது. இதில் எடுக்கப்படும் முடிவுகள் தான் கட்சியில் எதிரொலிக்கும். தேர்தல் மற்றும் ஆட்சி ரீதியிலான விஷயங்களுக்கு பலமான அடித்தளம் இங்கிருந்து தான் போடப்படும். இக்கட்சியில் அதிகாரமிக்க நாற்காலியில் அமர்ந்திருப்பவர் பிரதமர் நரேந்திர மோடி. இவரை நம்பர் ஒன் என்று சொல்லலாம்.

யார் இந்த பி.எல்.சந்தோஷ்?

இவரைத் தொடர்ந்து அமித் ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் இருக்கின்றனர். நம்பர் 4 இடத்தில் இருப்பவர் தான் பி.எல்.சந்தோஷ். தேசிய அளவில் பாஜகவின் மாஸ்டர் மைண்ட்டாக செயல்பட்டு வருகிறார். அமித் ஷாவின் செயல்பாடுகள் வெளியில் தெரியும் அளவிற்கு பி.எல்.சந்தோஷ் பெரிதாக தெரிய மாட்டார். ஆனால் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து முடிக்கும் வல்லவர்.

கர்நாடகா தேர்தல்

இவரது தயவால் தான் தமிழக பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டது பலரும் அறிந்த விஷயம். இதுதவிர பாஜகவின் முதல் மூன்று இடங்களில் இருக்கும் தலைவர்கள் பெரிதும் நம்பக்கூடிய நபராக பி.எல்.சந்தோஷ் பார்க்கப்படுகிறார். இவர் கர்நாடகா மாநிலத்தை சேர்ந்தவர். சமீபத்தில் இங்கு நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக படுதோல்வியை தழுவியது.

மக்களவை தேர்தல் வியூகம்

இதிலிருந்து மீண்டு வந்து 2024 மக்களவை தேர்தலுக்கு வியூகம் வகுக்க ஆரம்பித்து விட்டனர். குறிப்பாக தெற்கின் தயவு இல்லாமல் பாஜக ஹாட்ரிக் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடும் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இருப்பினும் தெற்கில் பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கிறேன் பாருங்கள் எனக் கட்சி தலைமைக்கு உறுதி அளித்திருக்கிறார் பி.எல்.சந்தோஷ்.

ஒய்.எஸ்.சவுத்ரி சந்திப்பு

இந்நிலையில் தான் முன்னாள் மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி உடனான சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். முன்னதாக தெலுங்கு தேசம் கட்சியில் இருந்தார். தற்போது பாஜகவில் இருக்கிறார். வரும் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை கருத்தில் கொண்டு ஆந்திராவில் பாஜகவின் வெற்றிக்கு தீவிரமாக உழைத்து கொண்டிருக்கிறார்.

ஆந்திராவில் புதிய கூட்டணி

ஆந்திராவில் வரும் 2024ல் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் ஆகிய இரண்டும் வரவுள்ளது கவனிக்கத்தக்கது. இதற்காக தெலுங்கு தேசம் கட்சி உடன் கைகோர்க்க வியூகம் வகுத்துள்ளனர். இதற்கு வலு சேர்க்கும் வகையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் அமித் ஷா மற்றும் ஜே.பி.நட்டாவை தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு சந்தித்து பேசினார்.

கூடவே தெலங்கானா மாநிலமும்

ஆந்திரா மட்டுமின்றி தெலங்கானா மாநிலத்திலும் பாஜக – தெலுங்கு தேசம் கூட்டணி அமைய அதிக வாய்ப்புகள் இருப்பதாக பேசப்படுகிறது. இங்கு நடப்பாண்டே சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த இரு மாநிலங்களிலும் பாஜகவை விஸ்வரூபம் எடுக்க வைத்து கணிசமான தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை பெற்று தரும் வேலைகளில் பி.எல்.சந்தோஷ் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கான அடுத்தகட்ட நகர்வுகளை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.