பெங்களூருவில் வேலை பாக்குறீங்களா? இதோ சூப்பர் நியூஸ் உங்களுக்காக…!

இந்தியாவின் ஐடி நகரம் என்றால் பெங்களூரு நகரம் தான் முதலில் நினைவில் தோன்றும். தற்போது பல்வேறு நகரங்களில் ஐடி ஹப் (IT Hub) என்று சொல்லப்படும் அளவிற்கு ஏராளமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் குவிந்து கிடக்கின்றன. ஆனால் இதன் தொடக்கப் புள்ளி என்று பார்த்தால் பெங்களூரு தான் முன்னால் வந்து நிற்கும். தற்போது சர்வதேச அளவில் மிக முக்கியமான நகராக திகழ்ந்து கொண்டிருக்கிறது.

பெங்களூருவில் பணிச் சூழல்

இங்கு இளைஞர்களுக்கு மட்டுமின்றி மூத்த குடிமக்களுக்கும் ஏராளமான வேலைவாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இவர்களுக்கான பணிச் சூழல், பாதுகாப்பு, திருப்திகரமான மனநிலை, நிறுவனங்களின் ஒத்துழைப்பு போன்ற விஷயங்கள் எப்படி இருக்கின்றன எனக் கேள்வி எழலாம். இதற்கு பதிலளிக்கும் வகையில் ஹெல்ப் ஏஜ் இந்தியா (HelpAge India) என்ற அமைப்பு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியுள்ளது.

ஹெல்ப் ஏஜ் இந்தியா ஆய்வு

இதன் முடிவுகளை சர்வதேச முதியோர் துன்புறுத்தல் விழிப்புணர்வு தினத்தை (ஜூன் 15) ஒட்டி வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக்கணிப்பு 20 மாநிலங்களை சேர்ந்த 7,911 பேரிடம் நடத்தப்பட்டுள்ளது. அதில் பெங்களூரு மாநகரை சேர்ந்த 578 மூத்த பெண்கள் அடங்குவர். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் பெங்களூருவில் 85 சதவீதம் மூத்த பெண்கள் தங்களின் பணிச் சூழல் மிகவும் பாதுகாப்பாக, நட்புறவுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

மூத்த குடிமக்கள் மகிழ்ச்சி

இது தேசிய சராசரியை (64 சதவீதம்) விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, விருப்பத்திற்கு ஏற்ற வேலை நேரம், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு, தங்களின் நிலையை சரியாக புரிந்து கொள்ளும் நிர்வாகம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையிலான நிகழ்வுகள் உள்ளிட்டவை நம்பிக்கையூட்டும் வகையில் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

வேலை செய்பவர்கள் குறைவு

சுருக்கமாக சொல்ல வேண்டுமெனில் முதியவர்களுக்கு ஏற்ற பணிச் சூழல் பெங்களூருவில் காணப்படுகிறதாம். இதில் முரண்படும் விஷயம் ஒன்று இருக்கிறது. பெங்களூருவில் மூத்த குடிமக்கள் பணியாற்ற சாதகமான அம்சங்கள் இருந்தாலும் 33 சதவீதம் பேர் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். எஞ்சிய 67 சதவீதம் பேர் வீட்டில் தான் இருக்கின்றனர்.

பொருளாதார சுதந்திரம்

இதுபற்றி விசாரிக்கையில், மேற்குறிப்பிட்ட வகையில் வாய்ப்பை உருவாக்கி கொள்ள வீடுகளில் அனுமதி கிடைப்பதில்லை. பலரும் போதிய ஒத்துழைப்பு வழங்க மறுப்பதாக கூறுகின்றனர். ஆனால் தாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும். பொருளாதார ரீதியில் யாரையும் நம்பியிருக்க விரும்பவில்லை. சொந்த காலில் நிற்க வேண்டும் என விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.

பெங்களூரு ஹேப்பி டேஸ்

பெங்களூருவில் மகிழ்ச்சியான பணிச் சூழல் இருப்பதாக இளைய சமூகத்தினரும் கூறி வருகின்றனர். இதமான காலநிலை, ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்கள், நடுத்தரமான செலவீனம் எனப் பல விஷயங்கள் சாதகமாக இருப்பதை சுட்டிக் காட்டுகின்றனர். இவை அனைத்தும் பெங்களூருவில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் வேலை செய்ய விரும்புபவர்களுக்கு நல்ல செய்தியாக அமைந்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.