போதை பொருள் விற்பனை தெலுங்கு விநியோகஸ்தர் கைது

கடந்த இரண்டு வருடங்களாகவே தெலுங்கு திரை உலகில் போதைப்பொருள் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதற்கேற்றபடி போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை, திரையுலகில் உள்ள பல பிரபல நட்சத்திரங்களின் மீதும் சந்தேகப் பார்வை வீசி வருவதுடன் அவர்களை அவ்வப்போது அழைத்து விசாரித்தும் வருகிறது. இந்த நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகை சேர்ந்த விநியோகஸ்தரான கே.பி சவுத்ரி என்பவரை போதைப்பொருள் வைத்திருந்ததாக கூறி சைபராபாத் போலீசார் கைது செய்து போதைப்பொருள் தடுப்பு துறை வசம் ஒப்படைத்துள்ளனர்.

ரஜினிகாந்த் நடித்த கபாலி படத்தை தெலுங்கில் வெளியிட்ட விநியோகஸ்தர் தான் இந்த கே.பி சவுத்ரி. அதன் பிறகு சர்தார் கபார் சிங், அதர்வா நடித்த கணிதன் உள்ளிட்ட படங்களை தெலுங்கில் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் ஐதராபாத்தில் உள்ள ராஜேந்தர் நகர் அருகில் உள்ள கிஸ்மத்பூர் என்கிற இடத்தில் உள்ள அவரது வீட்டை விட்டு அவர் புறப்படும் போது அவரது காரை மறித்த போலீசார் சோதனை செய்தபோது அவரிடம் ஒரு கிராம் அளவு கொண்ட 90 கோகைன் பாக்கெட்டுகள் இருந்ததாக கூறப்படுகிறது.

கோவாவில் இருந்து அவர் நூறு பாக்கெட்டுகள் வாங்கியதாகவும் மீதி 10 பாக்கெட்டுகளை யார் யாருக்கு அவர் விநியோகம் செய்தார் என்பது குறித்தும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரிக்க உள்ளனராம். தெலுங்கு பட விநியோகஸ்தர் ஒருவர் இப்படி போதைப்பொருள் விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளது தெலுங்கு திரை உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.