மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு குறைவான நிதி தான் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது – நீதிபதிகள் கவலை.!!
மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த ராஜா என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதில், சிறையில் உள்ள கைதிகளுடன் வழக்குத் தொடர்பாக வழக்கறிஞர்கள் விசாரிப்பதற்கான உள்ள நடைமுறைகளால் ஒரு நாள் முழுவதும் வீணாவதாகவும், சிறைக் கைதிகளுடன் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு தொடர்பாக வழக்கறிஞர்கள் விசாரிப்பதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனு உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கெளரி உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ‘’டெல்லி உயர் நீதிமன்றத்தின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட குறைவான நிதியே உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மத்திய அரசு ஒதுக்குகிறது.
மாநில அரசு நீதித்துறை அதிகாரிகளுக்கான ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. இதனால் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளை விட, நீதிமன்ற தலைமை எழுத்தர் அதிக ஊதியம் பெறும் நிலை உள்ளது.
கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஊதியக்குழு பரிந்துரைகள் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது. ஆனால், மாநில அரசு அதனை நடைமுறைப்படுத்தவில்லை” எனக் கருத்து தெரிவித்தனர்.
மேலும், “சிறையில் உள்ள கைதிகளுடன் வழக்கறிஞர்கள் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் வழக்கு தொடர்பாக விசாரிக்க அனுமதிக்க முடியுமா? என்பது குறித்து சிறைத்துறை தலைவர் பதில் அளிக்க வேண்டும் ” என்று உத்தரவிட்டு இந்த வழக்கினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.