இந்தியா முழுவதும் அனைத்து மருத்துவப் படிப்பிற்கான இடங்களை தேசிய பொது கலந்தாய்வு மூலம் மத்திய அரசே நிரப்புவதற்கான முன்மொழிவை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டிருப்பதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. குறிப்பாக, பா.ஜ. தவிர்த்த மற்ற தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும், `மாநில உரிமைகளையும், இட ஒதுக்கீட்டையும் பறிக்கும் செயல்; இந்த முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்’ என கண்டனம் தெரிவித்திருக்கின்றனர்.
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பு:
கடந்த ஜூன் 2-ம் தேதி, தேசிய மருத்துவ ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் உள்ள இளநிலை, முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 100% இடங்களுக்கும் (நீட் மதிப்பெண் தரவரிசைப் பட்டியல் அடிப்படையில்) மத்திய அரசின் சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரகத்தின் மருத்துவக் கலந்தாய்வு குழுவே ஆன்லைன் மூலமாக பொதுக்கலந்தாய்வு நடத்த முடிவு செய்திருப்பதாக தெரிவித்து அரசிதழில் வெளியிட்டது. மேலும் இதுதொடர்பான சுற்றறிக்கையை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியது.
`பாதகம்!’ – எதிர்க்கும் தமிழ்நாடு அரசியல் தலைவர்கள்:
எடப்பாடி பழனிசாமி, பொதுச்செயலாளர், அ.தி.மு.க
“தமிழகத்தின் உரிமையையும், அதிகாரத்தையும் பறிக்கும் வகையில், இளநிலை மருத்துவப் படிப்பில் அகில இந்திய அளவில் பொது கவுன்சிலிங் நடத்தப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பாணை ஏற்புடையதல்ல. இதனை மறுபரிசீலனை செய்து மீண்டும் தற்போதுள்ள நடைமுறையிலேயே MBBS மருத்துவ சேர்க்கையை நடத்த வேண்டும்!”
ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் முதலமைச்சர்
“தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகள் மாநில அரசின் நிதியிலிருந்து கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. எனவே, மாநிலத்துக்குட்பட்ட மருத்துவ இருக்கைகளை மாநில அரசு நிரப்புவது என்பதுதான் பொருத்தமுடைய ஒன்று. அப்பொழுதுதான் மாநிலத்தில் கடைபிடிக்கப்பட்டு வரும் இட ஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு ஆகியவை காப்பாற்றப்படும். மேலும், மாநிலத்துக்குட்பட்ட மருத்துவ இருக்கைகள் தமிழ்நாட்டு மாணவ, மாணவியருக்குத்தான் கிடைக்கிறதா என்பதும் உறுதிப்படுத்தப்படும். இது மட்டுமல்லாமல், காலங்காலமாக மாநில அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த கலந்தாய்வினை மாற்றுவது என்பது மாநிலத்தின் உரிமையை பறிப்பதற்கு சமம். இதனை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது!”
கே.பாலகிருஷ்ணன், மாநில செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
“தமிழகத்தில் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிக்கும் தனித்தனியாக 69% இடஒதுக்கீடு கொள்கை அமலாக்கும் வகையில் மருத்துவ கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஒவ்வொரு மருத்துவக் கல்லூரிகளிலும் பட்டியலின, பழங்குடி, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டினை பெற வாய்ப்புள்ளது. மத்திய அரசின் தற்போதைய நடவடிக்கையால் இத்தகைய இடஒதுக்கீட்டு முறை பறிக்கப்பட்டு ஒரு சில உயர் மருத்துவக் கல்லூரிகளில் முன்னேறிய சமூகத்தினரும், இரண்டாம் தர, மூன்றாம் தர மருத்துவ கல்லூரிகளில் எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., மாணவர்கள் பயிலும் மோசமான நிலை ஏற்படும்!”
டிடிவி தினகரன், பொதுச் செயலாளர், அ.ம.மு.க
“எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கையில் ஒட்டு மொத்தமாக தேசம் முழுவதற்கும் கலந்தாய்வு நடத்தும் பட்சத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் மருத்துவம் படிக்கவேண்டும் என்ற ஆசையும், எதிர்பார்ப்பும் நிராசையாகிவிடும் ஆபத்துகள் உள்ளன.எனவே, தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 85% எம்பிபிஎஸ் இடங்களை நிரப்ப கடந்த காலங்களைப் போல மாநில அரசே கலந்தாய்வு நடத்தவும், மீதமுள்ள 15% இடங்களில் மட்டும் மத்திய அரசு கலந்தாய்வு நடத்தவும் வழிவகை செய்வதற்கு ஒப்புதல் தெரிவிக்க வேண்டும்!”
அன்புமணி ராமதாஸ், தலைவர், பா.ம.க
“மாணவர்களின் நலன் என்ற பெயரில் திணிக்கப்படும் இந்த புதிய கலந்தாய்வு முறை மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் செயலாகும். ஒட்டுமொத்த இந்தியாவிலும் மருத்துவப் படிப்புக்காக விண்ணப்பிப்பவர்களில் 80 விழுக்காட்டினர் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மாநில மருத்துவப் பல்கலைக்கழகங்களுடன் இணைக்கப்பட்ட தனியார் மருத்துவக் கல்லூரிகளிலுள்ள இடங்களுக்கான கலந்தாய்வுகளில் தான் பங்கேற்கின்றனர். மத்திய அரசு, மாநில அரசு ஆகிய இரண்டும் நடத்தும் கலந்தாய்வுகளில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கை 20 விழுக்காட்டுக்கும் குறைவு தான்.
ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு வகையான இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது. மத்திய அரசு நடத்தும் மாணவர் சேர்க்கையிலும் அதே இட ஒதுக்கீட்டு முறை தான் கடைபிடிக்கப்படும் என்றாலும் கூட, 28 மாநிலங்கள் மற்றும் 8 யூனியன் பிரதேசங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அந்தந்த மாநிலத்தின் இட ஒதுக்கீட்டு முறையை கடைபிடித்து மத்திய அரசே கலந்தாய்வை நடத்துவது சாத்தியமல்ல. அதனால் ஏராளமான குழப்பங்களும், முறைகேடுகளும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. இவை அனைத்தையும் கடந்து ஒரே நாடு, ஒரே கல்வி, ஒரே கலந்தாய்வு என ஒற்றைத் தன்மையை திணிப்பதை அனுமதிக்க முடியாது!”
`சாதகம்’ – ஆதரிக்கும் பா.ஜ.க!
கே. அண்ணாமலை, மாநில தலைவர், பா.ஜ.க
“திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி ஒரு பேட்டியில் சொல்கிறார், `நாங்கள் எப்படி மெடிக்கல் கவுன்சில் கொடுப்போம் என்றால், நாங்களாகவே ஒரு மெரிட் லிஸ்ட்டை எடுத்துக்கொள்வோம். எந்த குழந்தைகளுக்கு எல்லாம் 100% சீட் கிடைக்குமோ அந்த குழந்தைகளுக்கு தனியார் கல்லூரிகளில் சீட் கொடுத்துவிடுவோம். அதன்பின் அவர்கள் அரசு கல்லூரிகளில் சீட் கிடைத்ததும் போய்விடுவார்கள். அந்த குழந்தை மாறியதும் காலியான சீட்டை விற்றுவிடுவோம்.இதுதான் எங்களுடைய டெக்னிக்” என்று ஆன் ரெக்கார்டில் சொல்லியிருக்கிறார். தி.மு.க-வினர் இதை பொய் என நிரூபித்தால் நான் அரசியலை விட்டே சென்று விடுகிறேன். அதனால்தான் தி.மு.க.வினர் குறிப்பாக 2006- 2011 வரையிலான ஆட்சியில், மிக அதிகமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள் தமிழ்நாட்டில் திறக்கப்பட்டன. நீட் தேர்வு வருவதற்கு முன் தமிழ்நாட்டில் மருத்துவ மாணவர் சேர்க்கை ஓர் அசிங்கமான ஊழல் நிறைந்த ஒரு கலந்தாய்வாக இருந்தது!”
தமிழிசை சௌந்தரராஜன், தெலங்கானா ஆளுநர்
“மருத்துவ கல்விக்கான கலந்தாய்வு தொடர்பாக தேசிய மருத்துவக் குழுவிடம் தொடர்பு கொண்டிருக்கிறேன். புதிய கலந்தாய்வு குறித்து எந்த முயற்சியை மத்திய அரசு எடுத்தாலும் அது மாநில அரசுகளை பாதிக்காத வகையில்தான எடுக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. உரிமைகளும் பறிக்கப்படாது என்பதில் சந்தேகம் இல்லை!”
`தடுப்போம்’ – சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்
“பொதுக் கலந்தாய்வு குறித்து அறிவிப்பு வெளியானதும், மத்திய அரசுக்கு தமிழக அரசின் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது. மாநிலங்களின் பங்களிப்பை குறைப்பது என்று பல்வேறு விஷயங்களை குறிப்பிட்டு, பொதுக் கலந்தாய்வு ஏற்புடையதல்ல என கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது. மாநில உரிமைகளை மீறும் வகையிலான அறிவிப்புகள் ஏற்புடையதல்ல. அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் பொதுக் கலந்தாய்வு நடத்தப்பட்டால் அதனை தவிர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இதுகுறித்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்திக்கவும் நேரம் கேட்டிருக்கிறோம். கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா முடிந்ததும் 16,17,18 ஆகிய தேதிகளில் டெல்லி சென்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சரை சந்திக்க உள்ளோம். பொதுக் கலந்தாய்வு நடந்தால் மாணவர்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படும். அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இட ஒதுக்கீடு சலுகைகளும் பாதிக்கப்படும். தற்போது நீட் தேர்வுக்கு அரசு சார்பில் மேற்கொண்டு வரும் சட்ட போராட்டங்களை போல பொது கலந்தாய்வுக்கும் சட்ட போராட்டம் நடத்தப்படும். மருத்துவக் கல்வியில் பொதுக் கலந்தாய்வு என்பது இந்த வருடம் இல்லை. அடுத்த வருடத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.பொதுக் கலந்தாய்வு கொள்கையை ஒருபோதும் தமிழகத்தில் கொண்டுவர விடமாட்டோம்!”