பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் முந்தைய பாஜக அரசால் கொண்டுவரப்பட்ட மதமாற்ற தடை சட்டத்தை வாபஸ் பெறுவது என முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவை கூட்டம் இன்று அதிரடியாக முடிவு செய்துள்ளது.
கர்நாடகா சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி முதல்வர் சித்தராமையா தலைமையில் ஆட்சி அமைத்துள்ளது. கர்நாடகா துணை முதல்வராக டிகே சிவகுமார் பதவி வகிக்கிறார்.
கர்நாடகாவில் ஆட்சியை பிடித்த கையோடு பெண்களுக்கான இலவச பேருந்து உள்ளிட்ட தேர்தலின் போது மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்திய 5 முக்கிய வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார் முதல்வர் சித்தராமையா. இதனையடுத்து 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கான இலவச பேருந்து பயணம் உள்ளிட்டவை நடைமுறைக்கு வந்துள்ளன.
இதனைத் தொடர்ந்து முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த சர்ச்சைக்குரிய, இந்துத்துவா சார்ந்த நடவடிக்கைகளை கையில் எடுத்திருக்கிறது சித்தராமையா அரசு. பசுவதை தடை சட்டத்தி ல் உரிய திருத்தங்கள் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது முந்தைய பாஜக அரசு கொண்டு வந்த மதமாற்ற தடைச் சட்டத்தை திரும்ப பெறுவது என இன்று நடைபெற்ற முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல கர்நாடகா பாடப் புத்தகங்களில் ஹெட்கேவர் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். இயக்க தலைவர்கள் பற்றிய பாடங்கள் நீக்கப்படுகின்றன. அதேநேரத்தில் கர்நாடகாவில் அனைத்து அரசு, தனியார் பள்ளி- கல்லூரிகளில் தேசத்தின் அரசியல் சாசனம் கட்டாயம் இடம்பெறுவதற்கான நடவடிக்கையையும் கர்நாடகா காங்கிரஸ் அரசு மேற்கொண்டுள்ளது.