காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருக்கும் பைபர்ஜாய் புயல் பாகிஸ்தானில் கரையை கடக்கும் என்று கடந்த சில நாட்களாக கூறப்பட்டு வந்த நிலையில் அது குஜராத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ள நிலையில் அங்கு இப்போதே பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
இன்று பிற்பகல் வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “நேற்று (14.06.2023) வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் “பிப்பர்ஜாய், வடக்கு – வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று (15.06.2023) காலை 08:30 மணி அளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு – தென்மேற்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கே சுமார் 210 கிலோமீட்டர் தொலைவில், போர்பந்தரில் (குஜராத்) இருந்து மேற்கு-வடமேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று (15.06.2023) மாலை மிகத்தீவிர புயலாக, மாண்டிவி (குஜராத்) – மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 140 கிலோ மீட்டர் வேகத்திலும் இருக்கக்கூடும்.” என்று தெரிவித்து இருந்தது.
இந்த நிலையில் தற்போது பைபர்ஜாய் புயல் கரையைக் கடக்க தொடங்கி இருக்கிறது. பைபர்ஜாய் புயல் கரையை முழுவதுமாக கடக்க சுமார் 6 மணி நேரம் ஆகும் என்று கூறப்படுகிறது. நள்ளிரவு புயல் கரையை கடக்க இருப்பதால் குஜராத் கடலோர பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கி வருகிறது.
முன்னதாக மணிக்கு 60 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வந்த நிலையில் தற்போது 115 முதல் 120 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசி வருவதாக கூறப்ப புயல் கரையை நெருங்கி வருவதாக வானிலை மையம் தெரிவித்து உல்ளது. அது கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் மேலும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
70 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டு உள்ள பைபர்ஜாய் புயலுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதுவரை 23 ரயில்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதுவரை மொத்தமாக 99 ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டு உள்ளது.
ரயில்வே பாதுகாப்பு தொடர்பாக மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வார் ரூம் அமைத்து அறிவுரைகளை வழங்கி வருகிறார். குஜராத்தின் துவாரகா உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றின் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. தற்போது மழை வெளுத்து வாங்கி வரும் நிலையில் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளார்கள்.