ராமநாதபுரத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வழக்கு ஒன்றில் நிபந்தனை ஜாமீன் கையெழுத்திட வந்த ராமநாதபுரம் சிவஞானபுரத்தைச் சேர்ந்த அசோக்குமார் என்பவரை, ஆர்.எஸ்.மடையைச் சேர்ந்த கொக்கி குமார் என்ற ரௌடி நீதிமன்றத்துக்குள் வாளுடன் நுழைந்து, நீதிபதி தீர்ப்பு வழங்கும் வளாகத்துக்குள்ளேயே புகுந்து சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பினார். அவரை கேணிக்கரை ஆய்வாளர் ஆடிவேல் தலைமையிலான போலீஸார் சுட்டுப் பிடித்தனர். நீதிபதியின் விசாரணை அறையில் நடந்த இந்தக் கொலை முயற்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் நீதிமன்ற வளாகத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருக்கிறது. நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் அனைவரும் பலத்த சோதனைக்கு பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதன்படி போலீஸார் பேரிகார்டுகளை மூலம் இருவழிகளை ஏற்படுத்தியிருக்கின்றனர்.
ஒருவழியில் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதிமன்றப் பணியாளர்கள் சென்று வரவும், மற்றொரு வழியில் கைதிகள், விசாரணைக்கு வருபவர்கள், குற்றவாளிகளின் உறவினர்கள் சென்று வரும் வகையிலும் அமைத்திருக்கின்றனர். கைதிகள், விசாரணைக்கு வருபவர்கள், அவர்கள் உறவினர்கள் அனைவரும் பலத்த சோதனைக்குப் பின்னரே நீதிமன்றத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் இன்று காலை வழக்கம்போல் போலீஸார் நீதிமன்ற வளாகத்தில் உள்ளே நுழைபவர்களைச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் வழக்கு விசாரணைக்காக வந்த வாலிபர் ஒருவரை சோதனையிட்டபோது, அவர் கஞ்சாவை மறைத்து எடுத்து வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதைக் கைப்பற்றி அவரிடம் விசாரணை நடத்தினர்.
அதில், அந்த வாலிபர் ராமநாதபுரம் மாவட்டம், கமுதி கண்ணார்பட்டி எல்.எஃப்.ரோடு பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்ற சூப்பி பாலா (28) என்பதும், கொலை முயற்சி வழக்கில் கைதாகி ஜாமீனில் வெளியில் வந்த இவர் வழக்கு விசாரணைக்காக வந்திருப்பதும் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவரை கேணிக்கரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர் போலீஸார். அங்கு கேணிக்கரை போலீஸார் நடத்திய விசாரணையில் பாலமுருகன், “என்னுடைய சிறைக்கூட்டாளியான மரக்கடை மணிவண்ணன் என்பவர் கடந்த முறை வழக்கு விசாரணைக்கு போலீஸாரால் ஆஜர்படுத்த அழைத்து வரப்பட்டபோது, தான் சிறையில் இருப்பதாகவும், அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது கஞ்சா வாங்கிவரும்படியும் கூறினார்.
அதன்படி சிறைக்கூட்டாளியான நண்பனுக்காக கஞ்சா வாங்கி வந்தேன்” எனக் கூறியிருக்கிறார். அதையடுத்து பாலமுருகனைக் கைதுசெய்த போலீஸார், அவரிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறையில் இருப்பவர்களும், குற்றச் செயலில் ஈடுபட்டவர்களும் வழக்கு விசாரணைக்காக நீதிமன்றத்துக்கு வரும்போது, ஜாமீனில் வந்தவர்கள், வழக்கு விசாரணைக்கு வருபவர்கள் மூலம் கஞ்சா வாங்கிவரச் செய்து, அதை சிறைக்குப் பெற்றுச் செல்வது அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இதேபோன்று கீழக்கரையைச் சேர்ந்த நிர்மல்ராஜ் என்பவர் சிறையிலிருந்து வழக்கு விசாரணைக்காக ஆஜராக வந்தபோது ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகரைச் சேர்ந்த ‘சம்பவம் கார்த்திக்’ என்ற ரௌடி, நீதிமன்ற வளாகத்தில் வைத்து கஞ்சா கொடுக்க முயன்றபோது கையும் களவுமாகப் பிடிப்பட்டது குறிப்பிடத்தக்கது.