சிட்னி,-பார்லிமென்டுக்குள்ளேயே தனக்கு பாலியல் தொந்தரவு தரப்பட்டுள்ளதாக, ஆஸ்திரேலிய பெண் எம்.பி., பகீர் புகார் கூறிஉள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலிய பார்லிமென்டின் சுயேச்சை பெண் எம்.பி.,யாக இருப்பவர் லிடியா தோர்ப்.
இவர் பார்லிமென்டில் நேற்று முன்தினம் பேசிய போது, ‘மிகவும் அதிகார முள்ள ஒருவர், பார்லிமென்டிலேயே எனக்கு பாலியல் ரீதியாக தொந்தரவுகள் கொடுத்துள்ளார்.
‘இதனால், பார்லிமென்டுக்குள் அச்சத்துடனேயே வரவேண்டியுள்ளது’ என, குற்றஞ்சாட்டினார்.
பார்லிமென்ட் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதால், அவர் தன் புகாரை திரும்பப் பெற்றார்.
இந்நிலையில், நேற்று அவர் கூறியதாவது:
கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த டேவிட் வேன், பார்லிமென்டில் என்னிடம் பலமுறை அத்து மீறி நடக்க முயன்றார்.
ஆபாசமாக பேசுவது, தகாத இடங்களில் தொடுவது, தகாத முறையில் நடக்க முயன்றது என, தொடர்ந்து பல பாலியல் தொந்தரவுகள் கொடுத்துள்ளார். பார்லிமென்ட் பெண்களுக்கு பாதுகாப்பானதாக இல்லை. இதனால், அச்சத்துடனேயே உள்ளே வர வேண்டியுள்ளது.
என்னைப் போல பல பெண்களும் இதுபோல் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், தங்களுடைய எதிர்காலம் மற்றும் அவமானத்தை கருதி அவர்கள் வெளிப்படுத்தாமல் உள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தப் புகார்களை டேவிட் வேன் மறுத்துள்ளார். அதே நேரத்தில், அவரை கட்சியில் இருந்து, ‘சஸ்பெண்ட்’ செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த, 2021ல் இருந்து பார்லிமென்டின் பெண் எம்.பி.,க்கள், ஊழியர்கள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாக பல புகார்கள் எழுந்துள்ளன.
இதையடுத்து அரசு நடத்திய ஆய்வில், பார்லிமென்டில் மூன்றில் இரண்டு பெண்கள், பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளது தெரியவந்துள்ளது.
அதிலும், பெண் எம்.பி.,க்களில், 63 சதவீதம் பேர் தாங்கள் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துஉள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்