ஆமதாபாத், அதிதீவிர சூறாவளி புயலாக உருமாறியுள்ள, ‘பிபர்ஜாய்’ குஜராத்தின் கட்ச் மாவட்டத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகம் அருகே இன்று மாலை கரையை கடப்பதை அடுத்து, அப்பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இது குறித்து, குஜராத் மாநில நிவாரண ஆணையர் அலோக் குமார் பாண்டே நேற்று கூறியதாவது:
கட்ச் மாவட்டத்தில் இருந்து 290 கி.மீ., துாரத்தில் புயல் மையம் கொண்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலோர பகுதிகளில் வசிக்கும் 50 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு ஏற்கனவே அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். மீதமுள்ள 5,000 பேரையும் அப்புறப்படுத்தும் பணி தொடர்கிறது.
நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 15 குழுக்களும், மாநில பேரிடர் மீட்புப் படையின் 12 குழுக்களும், மாநில சாலை மற்றும் கட்டட துறையின் 115 குழுக்களும், மின் துறையின் 397 குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநில முதல்வர் பூபேந்திர படேல், மாநில அரசின் அவசர நடவடிக்கை மையத்திற்கு நேற்று முன்தினம் இரவு நேரில் சென்றார்.
அங்கு, புயலை எதிர்கொள்வதற்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் தயார் நிலையை ஆய்வு செய்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement