அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் குஜராத் கடற்கரையில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளதாகவும், கரையோர மக்கள் 74 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்: அரபிக் கடலில் உருவான பிப்பர்ஜாய் புயல், குஜராத் கடற்கரையை நோக்கி 8 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. இன்று மாலை 4 மணி முதல் 8 மணிக்குள் புயல் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குஜராத்தின் ஜாக்குவா போர்ட் நகரில் இருந்து 140 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவபூமி துவாரகாவில் இருந்து 190 கிலோ மீட்டர் தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து 230 கிலோ மீட்டர் தொலைவிலும் புயல் உள்ளது.
வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து, சவுராஷ்ட்ரா மற்றும் கட்ச் இடையே பாகிஸ்தானை ஒட்டி புயல் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மணிக்கு 115-125 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும். இது அதிகபட்சம் 140 கிலோ மீட்டராக இருக்கலாம். இன்று மாலை கரையைக் கடக்கத் தொடங்கி நள்ளிரவு வரை அது தொடரும். கரையைக் கடந்த பிறகு புயலின் வேகம் படிப்படியாகக் குறையும். நாளை காலையில் அது 70 கிலோ மீட்டராக இருக்கும்.
புயல் எச்சரிக்கை: இந்தப் புயலால் குஜராத்தின் கட்ச், தேவபூமி துவாரகா, போர்பந்தர், ஜாம்நகர், மோர்பி மாவட்டங்கள் பாதிக்கப்படும். கடல் கொந்தளிப்புடன் காணப்படும். 2-3 மீட்டர் உயரத்துக்கு அலை எழும்பும். சில இடங்களில் இது அதிகபட்சம் 3-6 மீட்டராகவும் இருக்கும்.
அரசு எடுத்துள்ள நடவடிக்கை: பிப்பர்ஜாய் புயல் பாதிப்பை குறைக்கும் நோக்கில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் அரசு எடுத்துள்ளது. கடற்கரையோரத்தில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவு வரை வசித்து வந்தவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 74 ஆயிரம் பேர் இவ்வாறு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.