Doctor Vikatan: கிளாஸ் ஸ்கின் (Glass skin) எனப்படும் கண்ணாடி சருமம் எல்லோருக்கும் சாத்தியமா?

Doctor Vikatan: சமூக ஊடகங்களில் கிளாஸ் ஸ்கின் (glass skin) என்ற கண்ணாடி போல பளபளக்கும் சருமத்துக்கான கொரியன் அழகுக் குறிப்புகள் தொடர்பான வீடியோக்களை பார்க்கிறோம். உண்மையிலேயே கண்ணாடி போன்ற சருமம் பெறுவது எல்லோருக்கும் சாத்தியமா?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா.

சருமநல மருத்துவர் டாக்டர் பூர்ணிமா

கொரியன் அழகு சிகிச்சைகளில் சருமத்தின் இறந்த செல்களை நீக்கும் எக்ஸ்ஃபோலியேஷன் செய்வார்கள். பிறகு அதிகபட்ச மாய்ஸ்ச்சரைசர் உபயோகித்து, சருமத் துவாரங்களே தெரியாமல் செய்வார்கள். இதனால் சருமம் இளமையாகவும், பளபளவென்றும் காட்சியளிக்கும். இதையே கிளாஸ் ஸ்கின் என்கிறோம்.

இந்த ஒட்டுமொத்த சிகிச்சையில் நிறைய மாய்ஸ்ச்சரைசர், ஷீட் மாஸ்க், சீரம், ஃபேஸ்பேக் என கிட்டத்தட்ட 10 ஸ்டெப்ஸ் பின்பற்றப்படும். அத்தனையும் சேர்ந்து கண்ணாடி போன்ற சருமத்தைப் பெற வைக்கும். சருமத் துவாரமே வெளியில் தெரியாது.

அவர்களுக்கு இது எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி எழலாம். அவர்கள் உபயோகிக்கும் மாய்ஸ்ச்சரைசரில் லனோலின் (lanolin) என்பது இருக்கும். அது அதீத நீர்ச்சத்தைக் கொடுக்கும். நம்மூர் தட்பவெப்ப நிலைக்கும் நம் சருமத்தின் தன்மைக்கும் அது பலருக்கும் ஏற்றுக்கொள்வதில்லை. அதனால் சிலருக்கு பருக்கள் வரலாம்.

தவிர சருமத்தை தினமும் எக்ஸ்ஃபோலியேட் செய்வது சரியானதல்ல. அதனால் உடனே சருமத்தில் வெயிலால் ஏற்படும் பாதிப்பு, பங்கு எனப்படும் நிற மாற்றம் வர வாய்ப்பு உண்டு. எனவே நம்மூர் சீதோஷ்ண நிலைக்கேற்ற மாய்ஸ்ச்சரைசர் (water based) உபயோகிக்கலாம். தினமும் எக்ஸ்ஃபோலியேட் செய்வதற்கு பதில் வாரத்துக்கு ஒருமுறை மைல்டாகவும் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை கொஞ்சம் ஸ்ட்ராங் ஆகவும் செய்யலாம்.

கிளாஸ் ஸ்கின்

மைக்ரோநீடிலிங் போன்ற கருவியைப் பயன்படுத்துவதன் மூலம் சருமத் துவாரங்கள் டைட் ஆகும். சரும மருத்துவரின் ஆலோசனையோடு வைட்டமின் ஏ க்ரீம் பயன்படுத்துவதும் பலன் தரும். எதையுமே உங்கள் சருமத்துக்குப் பொருந்துமா என பார்த்து உபயோகிப்பதுதான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.