தனுஷின் D50-ல் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார் என சில வாரங்களுக்கு முன் வெளியான செய்தியில் குறிப்பிட்டிருந்தோம். சமீபத்தில் எஸ்.ஜே.சூர்யாவும் அதை உறுதி செய்தார். தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் இம்மாதம் வெளியாகும் என்றும், படத்தின் டீசர் அடுத்த மாதம் வெளிவருகிறது என்றும் கேப்டன் மில்லர் டீமே அறிவித்தனர். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் எப்போது வருகிறது? D50 படத்தின் அப்டேட் என்ன? என்பது குறித்து விசாரித்தோம்
தனுஷ், இப்போது ‘சாணி காயிதம்’ அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து வருகிறார். அதில் அவரது ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்கள் தவிர கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நிவேதிதா சதீஷ், சந்தீப் கிஷன், ஜான் கொக்கேன் நிறைய பேர் நடித்து வருகிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். சென்னை, குற்றாலம், தென்காசி ஆகிய இடங்களில் நடந்து வந்த படப்பிடிப்பு, தொடர்ந்து தென்காசி பகுதிகளில் நடந்து வருகிறது. கலை இயக்குநர் இராமலிங்கம் கைவண்ணத்தில் பீரியட் காலகட்டத்திற்கான அரங்கங்கள் அமைத்துள்ளனர். அதில்தான் படப்பிடிப்பு நடந்து வருகிறது. அங்கே இம்மாதம் கடைசி வரை நடைபெறலாம் எனத் தெரிகிறது.
அதன் பிறகு சின்ன இடைவெளிக்குப் பின் சென்னையில் படப்பிடிப்பு நடக்கும் என்றும் சொல்கின்றனர். இந்தக் கதை 1940 மற்றும் 1990 காலகட்டங்களிலும், தற்போதைய காலகட்டத்தையும் பிரதிபலிக்கும் கதையாக இருக்கும் என்ற ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இந்தப் படம் பீரியட் படமே தவிர பல காலகட்டங்களில் நடக்கும் கதை அல்ல என்கிறார்கள். ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் வாரத்தில் வெளியாகும் என்கிறார்கள். தனுஷின் பிறந்த நாளான ஜூலை 28ல் டீசர் வெளியாகிறது.
தனுஷின் 50-வது படமான ‘D50’ படத்திற்கு வருவோம். வடசென்னையின் கேங்ஸ்டர் கதை இது என்பதால், வடசென்னை ஏரியாவில் படப்பிடிப்பிற்காக லொகேஷன் தேடினார்கள். ஒரு பெரிய கிராமத்தையே செட் அமைக்க வேண்டியிருப்பதால் அதுக்கான இடம் அங்கே அமையவில்லை. இதனால் ஈசிஆரில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில் இப்போது அரங்கம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. படத்தில் துஷாரா, அபர்ணா பாலமுரளி, காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன் என பலரும் நடிப்பதாக தகவல்கள் உலா வருகிறது. ஆனால், எஸ்.ஜே.சூர்யா தவிர மற்ற நடிகர்கள் யாரும் உறுதி செய்யப்படவில்லை.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் ‘D50’ குறித்த அறிவிப்பு மற்றும் டைட்டில் குறித்து தனுஷ் தோன்றும் வீடியோ ஒன்றை தயாரித்திருந்தனர். ஆனால் இன்னமும் அதை வெளியிடாமல் உள்ளனர். அனேகமாக ‘கேப்டன் மில்லர்’ டீசரோடு, அதாவது தனுஷின் பிறந்த நாள் ஸ்பெஷலாக ‘D50’ வீடியோவும் வெளியானாலும் ஆச்சரியமில்லை.