சென்னை: ஏ.ஆர்.ரஹ்மான் தனது மகள் அளித்திருக்கும் பேட்டியை ட்விட்டரில் பகிர்ந்து எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என குறிப்பிட்டுள்ளார். அந்த ட்வீட் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.
இளையராஜாவிடம் உதவியாளராக இருந்து பல விளம்பர படங்களுக்கு இசையமைத்து ரோஜா படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஏ.ஆர். ரஹ்மான். தான் இசையமைத்த முதல் படத்திலேயே அனைவரது வரவேற்பையும் பெற்று தேசிய விருதையும் பெற்றார். அதன் பிறகு ரஹ்மான் போட்ட மெட்டெல்லாம் ஹிட்டாக பாலிவுட்டுக்கு சென்று அங்கும் தனது கொடியை பறக்கவைத்தார். இதனால் இந்தியா முழுவதும் அறியப்படும் இசையமைப்பாளராக மாறினார்.
இரண்டு ஆஸ்கர்களை அள்ளிவந்த தமிழன்: பாலிவுட்டில் இசையமைத்துக்கொண்டிருந்த ஏ.ஆர். ரஹ்மான் ஸ்லம்டாக் மில்லியனர் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். இந்தியாவில் எப்படி அறிமுகமான முதல் படத்திலேயே தேசிய விருதை வென்றாரோ அதேபோல் ஹாலிவுட்டிலும் தான் அறிமுகமான முதல் படத்திலேயே கோல்டன் க்ளோப் விருதுகளையும், இரண்டு ஆஸ்கர் விருதுகளையும் பெற்று அசத்தினார்.
புதுமைகளை புகுத்தும் ஏ.ஆர்.ரஹ்மான்: ஏ.ஆர்.ரஹ்மான் தனது பாடல்களில் எப்போதும் ஏதேனும் ஒரு புதுமையை புகுத்தும் வழக்கம் உடையவர். சமீபத்தில் அவர் இசையமைத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில்கூட பழங்கால கருவிகளை கொண்டு இசையமைத்தார். இப்படி பல புதுமைகளை புகுத்தி வழக்கமான முறையிலிருந்து மீறி இசையமைப்பது அவரது பழக்கம். அவரது இசையமைப்பில் மாமன்னன் படம் உருவாகியிருக்கிறது. இந்தப் படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
ஏ.ஆர்.ரஹ்மான் வாரிசுகள்: ஏ.ஆர்.ரஹ்மானுக்கு கதீஜா, ரஹீமா என்ற மகள்களும், அமீன் என்ற மகனும் இருக்கிறார்கள். பொதுவெளியில் அதிகம் தலைகாட்டாத அவர்களில் அமீன் 2.0 படத்தில் இடம்பெற்ற புல்லினங்கால், பத்து தல படத்தில் இடம்பெற்ற நினைவிருக்கா உள்ளிட்ட பாடல்களை பாடியிருக்கிறார். அவரது குரலுக்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது.
கதீஜா: இந்தச் சூழலில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளான கதீஜாவும் இப்போது இசையில் கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார். ஏற்கனவே அவர் தமிழில் சகவாசி என்ற பாடலை பாடியிருக்கிறார். மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தில் சின்னஞ்சிறு என்ற பாடல், இரவின் நிழலில் காயம் என்று தொடங்கும் பாடல் உள்ளிட்டவைகளை பாடியிருக்கிறார்.
ஃபரிஷ்டா: இவை தவிர ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவான ஃபரிஷ்டா என்ற சிங்கிள் பாடலையும் பாடி அசத்தினார். அந்தப் பாடலை தவிர்த்து ஆம்னா பிபி என்ற பாடலையும் அவர் பாடி ரசிகர்களை கவர்ந்தார். தற்போது அவர் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் மின்மினி படத்தின் மூலம் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கதீஜா பேட்டி: இந்நிலையில் கதீஜா ரஹ்மான் சமீபத்தில் அளித்த பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. அந்தப் பேட்டியில் பேசிய அவர், “என்னை எனது குரலால் மற்றவர்கள் அடையாளப்படுத்த வேண்டும். இவரின் மகள், இவரின் மனைவி என்று என்னை அடையாளப்படுத்துவதை நான் விரும்பவில்லை. நான் ஹிஜாப் அணிந்து வருவதை பலர் ட்ரோல் செய்யலாம். நான் அதற்கு தயாராகத்தான் இருக்கிறேன்.
நான் பாடிய ஃபரிஷ்டா, ஆம்னா பிபி என்ற இரண்டு பாடல்களும் பழைய ஸ்டீரியோ டைப்புகளை உடைக்கும் வகையில் இருந்தவை. அதேபோல் காயப்பட்ட உலகத்தை ஆற்றுப்படுத்தி பழைய மரபுகளையும் பெண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதையும் மாற்றும் நோக்கில் உருவானது.
திடீரென வெளிச்சம்: இத்தனை வருடங்கள் எங்களை ரொம்பவே பாதுகாப்பாக எங்கள் அப்பா பார்த்துக்கொண்டார். இப்போது என் மீது தீடிரென பலரது கவனம் திரும்புகையில் அதை கையாள்வது எனக்கு புதிதாகவே இருக்கிறது. நாம் சம்பாதித்ததில் 10 ரூபாயோ இல்லை 100 ரூபாயோ பிறருக்கு கொடுப்பது திருப்தியை அளிக்கக்கூடியது. எனது தாத்தா, அப்பா என என் குடும்பத்தில் இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள்.எனவே அதில் எனது திறமையை வளர்த்துக்கொண்டு மக்களுக்கு அதை எப்படி கொடுக்கிறேன் என்பதில்தான் எனது கவனம் இருக்கிறது” என்றார்.
கதீஜாவின் பயம்: இதற்கிடையே கதீஜாவுக்கு தன் திறமை மீது தனக்கே சந்தேகத்தையும், பயத்தையும் ஏற்படுத்தும் இம்போஸ்டர் சிண்ட்ரொம் என்ற சிக்கல் இருந்திருக்கிறது. அதுகுறித்து அவர் பேசுகையில், “அது ரொம்ப கஷ்டமான விஷயம். அந்த சிக்கல் என்னைவிட்டு போகும் என்று நான் நம்பவில்லை. எனவே அந்த பயத்தை பயன்படுத்தி இன்னும் சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்ற உத்வேகத்தில் இருக்கிறேன்.
ஏன் வந்தது: சிறந்து விளங்க வேண்டும் என்ற பதற்றத்தின் காரணமாகவும் அது வந்திருக்கலாம். இதே சிக்கல் எனது தந்தைக்கும் வந்திருக்கிறது. அதை எனது தந்தை கடந்து வந்திருக்கிறார். அதை நினைக்கும்போது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். இந்த உலகம் அமைதியாகவும், சகிப்புத்தன்மை உள்ளதாகவும் இருக்க வேண்டும்.மேலும், நம்மை போல் இல்லாதவர்களையும் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இருக்க வேண்டும்” என்றார்.
ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்: கதீஜா ரஹ்மானின் இந்தப் பேட்டி இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. மேலும் அந்த வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், எல்லா புகழும் இறைவன் ஒருவனுக்கே என குறிப்பிட்டுள்ளார். கதீஜா ரஹ்மானுக்கு சமீபத்தில்தான் திருமணம் நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.