தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியா முழுக்க அமலாக்கத்துறையின் அதிரடியும் செந்தில் பாலாஜியின் கைது சம்பவமும்தான் பேசு பொருளாகியுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்படுவார் என்று இந்த மாத தொடக்கத்தில் இருந்தே சோசியல் மீடியாவில் விவாதிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித் ஷா-வை, கரண்ட் கட் செய்து அவரை அவமதித்துவிட்டதாக திமுக அரசு மீது குற்றசாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படையுடன் கரூரில் களமிறங்கிய அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது தம்பி அசோக் ஆகியோர் வீடுகளில் சோதனை நடத்தினர். முன்னதாக அசோக்கைதான் அமலாக்கத்துறை கைது செய்யவிருப்பதாக தகவல் வந்தது. ஆனால் திடீர் திருப்பமாக அமைச்சரையே தூக்கியது அமலாக்கத்துறை.
விசாரணைக்கு ஆஜராகக்கோரி முறையான சம்மன் அனுப்பியும் செந்தில் பாலாஜி ஆஜராகவில்லை. இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜியை கைது செய்தது அமலாக்கத்துறை. ஆனால் அமைச்சரின் தனிப்பட்ட வழக்கை கட்சி பிரச்சினையாக மாற்றி அமைச்சர்கள் முதல் முதல்வர் வரைக்கும் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக பேசி ஒன்றிய அரசுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் போக்கு கடும் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் செந்தில் பாலாஜியின் கைதுக்கு பிறகு அவரது தம்பி அசோக் தலைமறைவாகிவிட்டதாக பேச்சுக்கள் எழ தொடங்கியுள்ளது. இதுகுறித்து சவுக்கு சங்கர் பதிவிட்டுள்ள ட்வீட்டில் ‘ அசோக் கைது செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அவரை பத்திரமாக அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமறைவாக்கிவிட்டார். எதற்காக என்றால்; ஒருவேளை அசோக் கைதாகிவிட்டால் முதல்வர் குடும்பத்துக்கு எவ்வளோ வருமானத்தை ஈட்டி கொடுத்த விவகாரம் தெரிந்து விடும். அசோக் அப்ரூவர் ஆக வாய்ப்பு உள்ளது. இதனால்தான் முதல்வர் ஸ்டாலின் இவ்வளோ பதட்டமாக உள்ளார்’ என்று சவுக்கு சங்கர் பற்ற வைத்துள்ளார்.
முன்னதாக செந்தில் பாலாஜியின் தம்பி அசோக் வீடு மற்றும் அவரது அலுவலகத்திலும் அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். ஆனால், அதுகுறித்த அறிக்கை எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இந்த நிலையில் அசோக் எங்கு இருக்கிறார்? அவர் கைது செய்யப்பட்டுவிடக்கூடாது என்பதில் செந்தில் பாலாஜியும், திமுக தலைமையும் முயற்சிகள் எடுத்தார்களா என்று அமலாக்கத்துறையின் கெடுபிடியால் தான் தெரிய வரும்.
இந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய அமலாக்கத்துறை வழக்கில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கிறது.