அதிகாரிகள் சமூகச் சிந்தனையோடு செயற்பட வேண்டும் – ஊர்காவற்றுறை ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் அமைச்சர் டக்ளஸ் வேண்டுகோள்

மக்கள் நலத் திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற சந்தர்ப்பங்களிலும் அவற்றுக்கான பயனாளர்களை தெரிவு செய்கின்ற போதும், எமது மக்களின் நலன்கள் சார்ந்த சமூகச் சிந்தனையோடு அதிகாரிகள் செயற்பட வேண்டும் என்று யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்தார்.

ஊர்காவற்றுறை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத் திட்டங்கள் தொடர்பாக நேற்று (15.06.2023) இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் ஆராய்ந்த போதே, கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஊர்காவற்றுறை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அடையாளப்படுத்தி, விரிவாக ஆராய்ந்து தீர்வுகாணும் நோக்கில் இடம்பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் போக்குவரத்து, விவசாயம், கால்நடை, குடிநீர் விநியோகம், கடற்றொழில் உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.

குறிப்பாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படுகின்ற காரைநகர் – ஊர்காவற்றுறை இடையிலான கடல் பாதை பழுதடைந்து இருப்பதனால், அதனை திருத்தி சேவையில் ஈடுபடுத்தும் வரையில், தனியார் படகுகளை வாடகைக்கு அமர்த்தி பொது மக்களுக்கான போக்குவரத்து சேவையை மேற்கொள்ளுமாறு யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் வீதிப் போக்குவரத்து ஆணைக்குழுவிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு குறித்த சேவை இடம்பெறுவதை உறுதிப்படுத்துமாறு பிரதேச செயலாளரையும் அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

அதேபோன்று, பிரதேசத்தில் உள்ள இறைச்சிக் கடைகள் மற்றும் உணவகங்களை திடீர் சோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுச் சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கால்நடைகள் திருடப்பட்டு இறைச்சிக்கு வெட்டப்படுவதை தடுக்கும் நோக்கிலே குறித்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, தீவகங்களுக்கு இடையிலான போக்குவரத்து கட்டணங்களை மீளாய்வு செய்தல், குடிநீர் விநியோகத்தினை உறுதிப்படுத்த போன்ற விடயங்களும் பிரஸ்தாபிக்கப்பட்டதுடன், ஏனைய விடயங்களை மிக விரைவில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்டக் கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.