பெய்ஜிங்: அமெரிக்காவின் டாலர் தற்போது சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், தங்கள் நாட்டின் ரூபாயான ‘யுவானை’ உலகமயமாக்க சீனா தற்போது சில அதிரடி முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவின் பணமான ‘டாலர்’ உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டதற்கு மிகப்பெரிய காரணம் இருந்தது. இரண்டாம் உலகப்போரின் போது பலவீனமடைந்த நாடுகளுக்கு அமெரிக்கா கடனுதவி செய்தபோதுதான் இந்த மாற்றம் ஏற்பட்டது. தற்போது வரை அந்நிய செலாவணி சந்தையின் மொத்த வரம்பில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமான இடத்தை டாலர்தான் பிடித்து வைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் இந்த பிடிப்பை தளர்த்த சீனாவும், ரஷ்யாவும் தொடர்ந்து முயன்று வருகின்றன.
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக தங்கள் நாட்டு பணமான யுவானை சர்வதேச நாணயமாக மாற்ற சீனா தற்போது அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. இதன்படி, சுமார் 24 பெரிய நிறுவனங்கள் ‘யுவானில்’ வர்த்தகம் செய்ய இருக்கிறது. இந்த வர்த்தகம் வரும் 19ம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்னர் இந்த நிறுவனங்கள் அமெரிக்க டாலரில்தான் வர்த்தகம் செய்து வந்தன.
இந்த பெரும் நிறுவனங்கள் யுவானில் வர்த்தகம் செய்வதன் மூலம் மற்ற சிறு குறு நிறுவனங்களும் யுவான் பக்கம் சாய வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் இந்த வர்த்தக மாற்றத்தை தொடங்கும் 24 நிறுவனங்களில் அலிபாபா மற்றும் டென்சென்ட் ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்நிறுவனங்கள் 19ம் தேதி முதல், ஹாங்காங் பங்குச் சந்தையில் (HKEX) டூயல் கவுண்டர் மாடலின் கீழ் யுவான் மற்றும் ஹாங்காங் டாலர் இரண்டிலும் வர்த்தகத்தில் ஈடுபடும்.
இது சீனாவுக்கு வெளியேயும் யுவானின் பயன்பாட்டை அதிகரிக்க செய்யும். ஆனால் இந்த மாற்றத்தால் சில சிக்கல்களும் எழ வாய்ப்பிருக்கிறது. அதாவது ஏற்கெனவே அமெரிக்காவும் அதன் கூட்டணி நாடுகளான ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் சீனாவுக்கு எதிராக இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்காவில் சீன நிறுவனங்கள் தொழில் செய்வதற்கு அதிக கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. அதேபோல சீனாவுக்குள் இந்த நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் வேண்டா வெறுப்பாகாதான் வர்த்தகத்தை மேற்கொண்டு வருகிறது.
அப்படி இருக்கையில், யுாவனில் வர்த்தகத்தை மாற்றும் போது டாலரில் வர்த்தகம் செய்யும் சில நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளுக்கு என்டு கார்ட்டு போடவும் சான்ஸ் இருக்கிறது. ஆனால் இதைப்பற்றியெல்லாம் சீனா அலட்டிக்கொள்வதாக தெரியவில்லை. இதன் நோக்கம் சர்வதேச வர்த்தகத்தில் டாலரை மட்டுமே நம்பியிருப்பதை தவிர்ப்பதுதான்.
மட்டுமல்லாது தற்போது சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. பொருளாதாரமும் நிலையானதாக, பலமானதாக இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள இந்த முடிவை எடுத்திருக்கிறது.
தற்போதைய சூழலில் சர்வதேச அளவில் நடைபெறும் பேமென்டுகள் செட்டில்மென்டில் 42% அமெரிக்க டாலர்களில்தான் நடக்கிறது. இதில் சீனாவின் யுவான் பங்கு வெறும் 2.29 சதவிகிதம்தான். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இது 1.95% என்கிற அளவில் இருந்தது.
அவ்வளவு ஏன், நமது அண்டை நாடான பாகிஸ்தான், ரஷ்யாவிடம்தான் எண்ணெய் வாங்குகிறது. ஆனால் இதற்கான பணத்தை சீனாவின் நாணயமான யுவானில்தான் கொடுக்கிறது. இப்படியாக சீனா தனது நாணயத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தி வருகிறது. ஒருவேளை இது சாத்தியமானால் நாளை இந்தியா சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடுவதில் சில சிரமங்களை எதிர்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.