இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் நகரில் திடீரென மறியல் போராட்டம் நடத்திய இந்துத்துவா அமைப்பான பஜ்ரங் தள் இயக்கத்தின் தொண்டர்களை போலீசார் சரமாரியாக தடியடி நடத்தி விரட்டியத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக ஆளும் ம.பி.யில் பஜ்ரங் தள் தொண்டர்கள் போலீசாரால் அடித்து விரட்டியடிக்கப்பட்டிருப்பது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகிவிட்டது.
இந்துத்துவா கொள்கையை தீவிரமாக பேசக் கூடிய பல அமைப்புகளில் பஜ்ரங்க தள் ஒன்று. இந்த இயக்கத்துக்கு பல்வேறு வன்முறை சம்பவங்களில் தொடர்பு உண்டு என்பதால் கர்நாடகாவில் தடை விதிப்போம் என தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியே கொடுத்தது காங்கிரஸ். இந்த வாக்குறுதி மிகப் பெரும் சர்ச்சையாகி பிரதமர் மோடி முதல் மத்திய அமைச்சர்கள் பலரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர்.
இப்பின்னணியில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நேற்று இரவு திடீரென பஜ்ரங் தள் தொண்டர்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். தங்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் இந்தூர் நகரில் போக்குவரத்து முடங்கியது. இதனையடுத்து பஜ்ரங் தள் தொண்டர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் அந்த இயக்கத்தினர் மறியலைக் கைவிட மறுத்தனர். இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி பஜ்ரங் தள் தொண்டர்களை விரட்டியடித்தனர்.
இது தொடர்பாக போலீசார் கூறுகையில், போதைப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டதாக பஜ்ரங் தள் தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த கைதுக்கு எதிராகத்தான் அவர்கள் போராட்டம் நடத்தினர் என்றனர். போலீசாரின் இந்த தடியடியில் பல பஜ்ரங் தள் தொண்டர்கள் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேச மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெறும் நிலையில் நடைபெற்ற இந்த தடியடி சம்பவம் பஜ்ரங் தள் தொண்டர்களிடையே ஆளும் பாஜக அரசு மீது கடும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருப்பதாகவும் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன.