மதுரையில் மது போதையில் பைக்கை ஓட்டிச் சென்று கார் மீது மோதிய ஆசாமி ஒருவர், ஆல்கஹால் அளவைக் கண்டறியும் ‘ப்ரீத் அனலைசர்’ கருவியில் ஊதச் சொல்லிக் கேட்டபோது கருவி மீது விரல்களால் தாளமிட்டு நாதஸ்வரம் வாசிப்பது போல் செய்து, போக்குவரத்துப் போலீசாரை சுமார் அரை மணி நேரம் பாடாய் படுத்தியுள்ளார்…
மதுரை பழங்காநத்தம் அருகே போடி லயன் மேம்பாலத்தில் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் மீது பைக் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. பைக்கை ஓட்டி வந்த நபர் முழு போதையில் இருந்ததால் அவ்வழியாகச் சென்றவர்கள் அவரை மடக்கிப் பிடித்து வைத்துக் கொண்டு போலீசுக்குத் தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போக்குவரத்து போலீசார் போதை ஆசாமியிடம் விசாரித்தபோது அவர் ஆணையூரை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பதும் மாநகராட்சி ஊழியராகப் பணியாற்றி வருபவர் என்பதும் தெரியவந்தது. பாலகிருஷ்ணன் மது போதையில் இருந்ததால் ஆல்கஹாலின் அளவைக் கண்டறிவதற்காக பிரீத் அனலைசர் கருவியில் ஊதுமாறு போலீசார் கூறினர். பாலகிருஷ்ணன் சரியான அழுத்தத்தில் காற்றை ஊதாததால் கருவியில் ரீடிங் சரியாக காண்பிக்கவில்லை.
மீண்டும் மீண்டும் ஊதுமாறு போலீசார் வற்புறுத்திய நிலையில், அவரோ பிரீத் அனலைசர் கருவியை கையில் பிடித்துக் கொண்டு விரல்களை தட்டி “பீப்பி” வாசிக்கத் தொடங்கினார்.
பாலகிருஷ்ணன் கையைப் பிடித்து அதன் மீது ஊதிக் காண்பித்த காவலர், அதேபோல் கருவியில் ஊதுமாறு கூறினார். ஆனாலும் சரியாக ஊதாமல் பாடாய்ப்படுத்தினார் பாலகிருஷ்ணன்.
ஒரு கட்டத்தில் கடுப்பான போலீசார் சரியா ஊதுடா என ஆவேசமாகவே, “ஏன் சார் என்னை டார்ச்சர் பண்றீங்க” என பதிலுக்கு கடுப்பானார் பாலகிருஷ்ணன்.
ஒரு கட்டத்தில் போலீசார் மிரட்டி ஊதவைத்த போது பிரீத் அனலைசரே ஸ்தம்பிக்கும் அளவிற்கு போதை அளவு 315 காட்டியது. போதை அளவு அதிகமாக இருந்தால் பாலகிருஷ்ணனை காவல் நிலையம் கொண்டு சென்று 10ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர். பின்னர் போதை தெளிந்ததும் உறவினர்களை காவல் நிலையம் வரவழைத்து அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.
அபராதம் கட்டிய பின்னர் டூவீலரை எடுத்து செல்லலாம் என போலீசார் கூறியதால் 300 ரூபாய்க்கு மது அருந்தியதற்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் கட்ட வேண்டியது இருக்கிறதே என்ன புலம்பியவாறு சென்றார்.