கர்நாடகா மாநிலம், கலபுருகி மாவட்டத்திலுள்ள பீமா நதியிலிருந்து, மணல் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கதையாக இருப்பதால், மணல் கொள்ளையைத் தடுக்க, மாவட்ட போலீஸார் தினமும் பீமா நதியை ஓட்டிய பகுதிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்றிரவு கலபுருகி மாவட்டத்தின், ஜெயவர்கி தாலுகாவிலுள்ள நாராயணபுரா பகுதியில், பீமா நதியில் மணல் கொள்ளை நடப்பதாக, நாராயணபுரா போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, தலைமைக் காவலர் மயூர், பிரமோத் ஆகிய இருவரும், தனித்தனி பைக்குகளில் அந்தப் பகுதியில் ரோந்துக்குச் சென்றனர்.
அப்போது, சட்ட விரோதமாக மணலை அள்ளிச் சென்று கொண்டிருந்த ஒரு டிராக்டரை தடுத்து நிறுத்த முயன்றபோது, அந்த டிராக்டர் டிரைவர், காவல்துறை அதிகாரி எனவும் பாராமல், அவர்மீது வாகனத்தை ஏற்றிக் கொலைசெய்துவிட்டு, அங்கிருந்து தப்பியோடியிருக்கிறார். மற்றொரு காவல்துறை அதிகாரி தப்பியோடிய சித்தண்ணா என்ற குற்றவாளியைத் துரத்திச் சென்று கைதுசெய்திருக்கிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவுசெய்திருக்கும் போலீஸார் தலைமறைவாக இருக்கும், மணல் மாஃபியாக்களைத் தேடி வருகின்றனர்.
மணல் கொள்ளையைத் தடுக்கச் சென்ற காவலரையே, மணல் மாஃபியாக்கள் கொலைசெய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.