வேலூர் மாவட்டத்தில் உள்ள குடியாத்தம் அருகே மூதாட்டி ஒருவர் காவல் நிலையத்திற்கு கிழிந்த ஆடையுடன் புகார் கொடுக்க வந்த நிலையில் அவருக்கு காவல் ஆய்வாளர் புத்தாடை வாங்கி கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் உள்ள சீவூர் பகுதியை சேர்ந்த வயதான மூதாட்டி ஒருவர், குடியாத்தத்தில் உள்ள காவல் நிலையத்திற்கு புகாரளிக்க வந்துள்ளார். அப்போது அங்கிருந்த காவல் ஆய்வாளர் லட்சுமி மூதாட்டியின் உடை கிழிந்து இருப்பதை பார்த்து அவருக்கு புதிய ஆடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் மூதாட்டி கொடுத்த புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவரிடம் உறுதியளித்தார். ஆய்வாளர் லட்சுமி கொடுத்த புத்தாடைகளை மூதாட்டி சிரிப்புடன் வாங்கிக் கொண்டு அங்கிருந்த போலீசாருக்கு தனது நன்றியை தெரிவித்தார்.
இந்த சம்பவம் காவல் நிலையத்தில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் லட்சுமிக்கு நெட்டிசன்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.