பண மோசடி விவகாரம் தொடர்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத்துறை மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளை, `பா.ஜ.க-வின் யதேச்சதிகாரப் போக்கு, அரசியல் பழிவாங்கல்’ என தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் விமர்சித்து, பா.ஜ.க-வுக்குக் கண்டனம் தெரிவித்துவருகின்றன.
இந்த நிலையில் பா.ஜ.க-வுக்கு எதிராக, தி.மு.க-வும், அதன் கூட்டணிக் கட்சிகளும் கோயம்புத்தூரில் மாபெரும் கண்டனக் கூட்டம் நடத்திவருகின்றன. இதில், ஆ.ராசா, டி.ஆர்.பாலு, கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உட்பட அனைத்து கூட்டணிக் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய தி.மு.க பொருளாளர் டி.ஆர்.பாலு, “யாரை மிரட்டுகிறீர்கள். நெருக்கடி காலத்தில் நெருப்பாற்றில் நீந்தியவர் ஸ்டாலின். அரவக்குறிச்சியில் (அண்ணாமலை) அந்த ஆளைத் தோற்கடித்தார் செந்தில் பாலாஜி. அரவக்குறிச்சி தொடங்கி ஈரோடு வரையிலான தேர்தல்களில் தி.மு.க வெற்றிபெற செந்தில் பாலாஜி முக்கியக் காரணம். கொங்கு மண்டலத்தின் முக்கியத் தலைவராக விளங்குகிறார்.
அரவக்குறிச்சியில் தோற்று, பின்னங்காலில் சென்றவர். அவரை இப்போதுதான் நீதிமன்றத்துக்கு அழைத்திருக்கிறேன். 14-ம் தேதி வருவார், கவலைப்படாதீர்கள். கொங்கு மண்டலம் கோபாலபுரத்தை நோக்கிப் பயணக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் இங்கு பிரமாண்ட வெற்றி பெற்று வெற்றி விழா நடத்துவோம்” என்றார்.