சென்னை:
தமிழகம் முழுவதும் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு இடமாக அறியப்படும் கிண்டி சிறுவர் பூங்கா அடுத்த 6 மாதங்களுக்கு மூடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. உலகத் தரம் வாய்ந்த பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. அப்படி என்னென்ன வசதிகள் செய்யப்படவுள்ளது என்பது குறித்து இங்கு பார்க்கலாம்.
தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சுற்றுலா தலங்கள் இருக்கின்றன. அவற்றில் குறிப்பிட்டு சொல்லும்படியான இடங்களில் கிண்டி சிறுவர் பூங்காவும் ஒன்று. இதற்கு சூப்பரான வரலாறு இருக்கிறது. 1600-ம் காலக்கட்டத்தில் மிகப்பெரிய வனமாக இருந்த கிண்டி காட்டின் ஒரு பகுதி பிரிட்டிஷாரால் அழகிய பூங்காவாக உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அங்குள்ள வன விலங்குகளை பிரிட்டிஷார் வேட்டையாடுவதற்கான கேம் ரிசர்வ் பார்க் (Game Reserve Park) ஆக இது மாறியது. இதையடுத்து, 1958-ம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தேசிய சிறுவர் பூங்காவாக இது மாற்றப்பட்டது.
அன்றில் இருந்து இப்போது வரை காலத்திற்கேற்ப பல்வேறு மாறுதல் புகுத்தப்பட்டு, பொதுமக்களுக்கு பிடித்தமான சுற்றுலாத தலமாக கிண்டி சிறுவர் பூங்கா விளங்குகிறது. இந்த பூங்காவுக்குள் மான், நரி, கழுதை புலி, முதலை, பாம்புகள், காட்டு முயல்கள், அணில்கள், எலிகள், வவ்வாள்கள் போன்ற உயிரினங்கள் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.
மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பூங்காவால் காலை முதல் மாலை வரை மக்கள் கூட்டம் நிரம்பியிருக்கும். சென்னைக்கு புதிதாக வந்தவர்களின் ஹாட் ஸ்பாட்டாகவும் கிண்டி சிறுவர் பூங்கா இருக்கிறது. இந்நிலையில், இந்த பூங்காவை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது இந்த பூங்காவை 6 மாதங்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது.
சர்வதேச தரத்தில் என்றால் சிறுவர்கள் விளையாடும் வகையிலான அம்யூஸ்மென்ட் பார்க்குகள், வாட்டர் கேம்ஸ் (Water Games) உள்ளிட்டவை கொண்டு வரப்படும் என்றும், அதிக அளவிலான விலங்குகள், பறவைகளும் அங்கு கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பூங்காவுக்குள்ளேயே கண்கவர் ரெஸ்டாரண்டுகளும் அமைக்கப்படும் எனத் தெரிகிறது.