சேலம்: “வீரபாண்டியாருக்கு ஒர் நியாயம், ஸ்டாலினுக்கு ஒர் நியாயமா?” – கே.பி ராமலிங்கம் கேள்வி

சேலம் வீரபாண்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட இளம்பிள்ளை பகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் 9 ஆண்டுகால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் பா.ஜ.க-வின் மாநிலத் துணைத் தலைவர் கே.பி ராமலிங்கம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தற்போது பிரதமராக இருந்து வரும் நரேந்திர மோடி நமது இந்திய தேசத்தை உலகின் கடை கோடிக்கும் தெரியும் வகையில் வளர்ச்சிப் பாதையில் கொண்டு சென்று இருக்கிறார்.

நரேந்திர மோடி ஆட்சிக்காலத்தில் தான் இந்தியாவில் 100 பெரிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொண்டுவரப்பட்டது. அதில் தமிழகத்தில் மட்டும் 12 பெரிய நகரங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டமானது செயல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் சேலம் பழைய பேருந்து நிலையம் ஈரடுக்கு பேருந்து நிலையமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. திருமணிமுத்தாறு மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளது. நேரு கலையரங்கம் நவீன மயமாக்கப்பட்ட வாகனங்கள் நிறுத்துமிடம் போன்றவற்றை தான் சமீபத்தில் தமிழக முதல்வரான ஸ்டாலின் திறந்து வைத்து சென்றார்.

இவை அனைத்துமே மத்திய அரசின் நிதியில் கட்டப்பட்டது என்பது அவர்களுக்கே தெரியும். இருந்தாலும் வெளியில், சந்துக்கு சந்தாக நாங்கள்தான் திட்டங்களை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று போஸ்டர் ஒட்டி விளம்பர படுத்தி வருகின்றனர்.

தாலி கட்டி கல்யாணம் பண்றது ஒருத்தன். பிறக்கும் குழந்தைக்கு பேர் வைக்கிறவன் ஒருத்தனா இருக்குது. தற்போது அந்த வேலையை தான் தமிழக முதல்வர் ஸ்டாலின் செய்துவருகிறார்.  அதேப்போல ஸ்டாலின் தலைமையிலான ஆட்சிக்கு வந்த சோதனை தான் தற்போது செந்தில் பாலாஜி விவகாரம், இதில், இன்னும் எத்தனை தலைகள் சிக்கப்போகிறது என்று தெரியவில்லை. ஏன்னா, சரக்கு பாட்டில் விற்பனையில் யார்யாருகெல்லாம் கமிசன் போயிருக்குனு அமலாக்கத்துறையிடம் ஆதாரம் சிக்கியிருக்கு இனி அவங்க பாத்துப்பாங்க.

முதல்வர் ஸ்டாலின் செந்தில் பாலாஜி சிக்கியதற்கு மத்திய அரசு தான் காரணம் என்று வெளியில் பேசி வருகிறார். கடந்த ஆட்சியில் நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கும்போது, செந்தில் பாலாஜியை பற்றி பேசிய வீடியோ தான் தற்போது இந்த ரெய்டுக்கே காரணம், இதில், எங்கே மத்திய அரசு தலையீடு வந்தது. வாயில் வந்ததை பேசக்கூடாது.

வீரபாண்டி ஆறுமுகம்

இவ்வளவு பேசுகிறாரே ஸ்டாலின், யாராவது குற்றவாளி என்று தெரிந்து விசாரணைக்கு அழைத்துச் செல்லுபவரை நேரில் சென்று பார்ப்பார்களா? ஆனால் தற்போதைய முதல்வர் சென்று பார்த்தார். இதே செந்தில் பாலாஜிக்கு நடந்த சம்பவம் தான் சேலம் வீரபாண்டி ஆறுமுகத்திற்கும் நடந்தது. வீரபாண்டியாரின் உறவினரான பாரப்பட்டி சுரேஷ் 6 கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று சிறையில் அடைக்கப்பட்டவரை, அப்போது வீரபாண்டியார் சிறைக்கு நேரில் சென்று பார்த்தார். அதற்கு ஸ்டாலின் வீரபாண்டியாரைப் பார்த்து, `ஒரு அமைச்சராக இருந்துக்கொண்டு ஒரு குற்றவாளியை நேரில் சென்று பார்க்கலாமா?’ என்று கேட்டார்.

இன்னைக்கு ஒரு முதலமைச்சராக இருந்துக்கொண்டு செந்தில் பாலாஜியை பார்க்கச் சென்றது சரியா! அப்போ வீரபாண்டியாருக்கு ஒரு நியாயம், தமிழக முதல்வருக்கு ஒரு நியாயமா? இது யாரையோ முட்டாளாக்குவது போன்று உள்ளது. என்னை பொறுத்தவரை செந்தில் பாலாஜியை வைத்து பார்க்கும்போது, வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுடன், சட்டமன்ற தேர்தலும் உடன் வந்துவிடும் என்பது உறுதியாக தெரிகிறது” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.