Rohit Sharma Wife Instagram Story: இந்திய கிரிக்கெட் ஆடவர் அணி நீண்ட நெடிய போட்டிகளுக்கு பின் தற்போது சற்று ஓய்வில் இருக்கிறது எனலாம். அடுத்து, இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், சில நாள்கள் இடைவெளி ஏற்பட்டுள்ளது. இதனால், வீரர்கள் தங்கள் நேரத்தை அவர்களின் குடும்பத்தினருடன் செலவிட்டு வருவதை பார்க்க முடிகிறது.
சுற்றுலாவில் ரோஹித்
அந்த வகையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுடன் இந்த நாள்களை குடும்பத்தினருடன் செலவிட்டு வருகிறார். அவர் தனது மனைவி ரித்திகா சஜ்தே மற்றும் மகள் சமைராவுடன் சுற்றுலா சென்றிருப்பதாக தெரிகிறது. ரோஹித் சர்மா தான் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டார்.
அதே நேரத்தில் ரோஹித் சர்மாவின் மனைவி ரித்திகாவின் இன்றைய (ஜூன் 16) இன்ஸ்டாகிராம் ஸ்டாரி பலரின் கவனத்தை ஈர்த்தது. ரித்திகா ரோஹித்தின் வீடியோவை வெளியிட்டு, எனது மொபைல் தவறி விழுந்ததை அடுத்து, அதை எடுக்க ரோஹித் தண்ணீரில் குதித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
புகைப்படத்தை பகிரும் ரசிகர்கள்
அதில்,”எனது தொலைபேசி தண்ணீரில் விழுந்தது, இந்த நபர் அதைக் காப்பாற்ற நீரில் குதித்தார்,” என்று ரித்திகா எழுதியுள்ளார். இதை தொடர்ந்து, பலரும் அதனை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ரோஹித் சர்மாவின் இந்த செயல் பலரையும் ரசிக்க வைத்தாலும், அவரின் அபிமானிகள் அவரை கவனமாக இருக்கும்படியும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா 209 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்ததை அடுத்து, ரோஹித் மீது பல விமர்சனங்கள் எழுந்துள்ளது. முக்கியமான போட்டிகளுக்கு இந்திய அணி தயாராக இல்லை என்று தோன்றியதாக மூத்த வீரர்கள் தரப்பில் குற்றச்சாட்டுகள் இருந்தன.
இக்கட்டான சூழலில் ரோஹித்
அணித்தேர்வுகள் மற்றும் பந்துவீச்சு மாற்றங்களின் அடிப்படையில் சில மோசமான முடிவுகளை ரோஹித் சர்மா எடுத்ததாக வல்லுநர்கள் கருத்து தெரிவித்தனர். இந்திய அணி WTC இறுதிப்போட்டியில், நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர்களுடன் விளையாடி ரவிச்சந்திரன் அஷ்வினை வெளியே அமர்த்தியது.
இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலியாவை முதல் இன்னிங்ஸில் கட்டுப்படுத்தத் தவறியதால், அவர்கள் 469 ரன்களை எடுத்தனர். முதல் இன்னிங்ஸில் ரன் கசிந்த பிறகு, ஆஸ்திரேலியாவின் ஆதிக்கத்தை இந்தியா தடுக்க போராடியது. இதற்கிடையில், ஐசிசி போட்டிகளில் இந்தியா இது மற்றொரு படுதோல்வியை சந்தித்தது. இந்திய அணி, கடைசியாக 2013இல் ஐசிசி கோப்பையை வென்றிருந்தது.
அடுத்த WTC சுழற்சிக்கு, ஒரு இறுதிப்போட்டி இல்லாமல் மூன்று போட்டிகளில் சிறப்பாக செயல்படும் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வழங்கலாம் என ரோஹித் சர்மா பரிந்துரையையும் அளித்திருந்தார். இறுதிப் போட்டியை இங்கிலாந்துக்கு வெளியேயும் நடத்த வேண்டும் எனவும் ரோஹித் தெரிவித்திருந்தார். இந்தாண்டு நடக்க உள்ள 50 ஓவர் ஆசிய கோப்பை, 50 ஓவர் உலகக்கோப்பை தொடர்களில் இந்தியா கோப்பையை வென்ற ஆக வேண்டும் என்ற நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தேர்வு செய்யப்படாதது ஏன்? அஸ்வின்