கோவை: தமிழ்நாட்டின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் இன்று திறக்கப்பட்டுள்ளது.. இதற்கான விற்பனையும் ஆரம்பமாகிவிட்டது.
தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த 2022ம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் 4 நாள் அரசு முறை பயணமாக துபாய் சென்றிருந்தார்.. அங்கு தொழிலதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தமிழ்நாட்டிற்கு முதலீடுகளையும் ஈர்த்திருந்தார்.
முதல்வர் ஸ்டாலின்: அதன் ஒரு பகுதியாக, சர்வதேச அளவில் பெரும் ஹைபர் மால்களை நடத்தி வரும், கேரளாவை சேர்ந்த தொழிலதிபர் யூசுப் அலிக்கு சொந்தமான லுலு இண்டெர்நேஷனல் குழுமம், தமிழ்நாட்டில் ரூ.3,500 கோடியை முதலீடு செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
கேரளா மாநிலம் கொச்சின் உட்பட உலகில் 22 நாடுகளில் 230 பிரம்மாண்ட ஹைபர் மால்களை லுலு குழுமம் நடத்தி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் மால்களை தொடங்கவும் திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி வரும் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் கோவையில் புதிய மால் ஒன்றை தொடங்க லுலு குழுமம் முடிவு செய்தது..
என்ன காரணம்: இதற்கு காரணம், சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ச்சி பெற்று வருவது கோவைதான்.. தொழில்துறையாகட்டும், கல்வியாகட்டும், மருத்துவ துறையாகட்டும், அனைத்திலுமே கோவை முன்னேறி வருகிறது.. அதனாலேயே கோவையில் லுலு மால்களை கட்ட முடிவானது..
கோவை அவிநாசி சாலையில் உள்ள லட்சுமி மில்ஸ் வளாகத்தில், இதற்கான பணிகள் துரிதமாகவே நடந்தது.. லுலு ஹைப்பர் மார்க்கெட் 1.20 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.. 2 நாட்களுக்கு முன்பு, இந்த கட்டிடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.. ஏற்கனவே, நிறைய டிபார்ட்மெண்ட் ஸ்டோர்கள், மால்கள் என பொதுமக்கள் ஷாப்பிங் செய்வதற்கு பல இடங்கள் கோவையில் இருந்தாலும், அனைத்து பொருட்களையும் ஒரே இடத்தில் அடக்குவதாக இந்த ஹைப்பர் மார்க்கெட் அமைந்துள்ளது.
சூடுபிடித்த விற்பனை: குறிப்பாக, வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என்று அனைத்துமே இதற்குள் அடங்கிவிட்டன.. அத்துடன், சூட்டோடு சூட்டாக மதியமே விற்பனையும் தொடங்கியாகிவிட்டது..
இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய லூ.லூ நிறுவனத்தின் ஓனர் யூசூப் அலி முக்கிய தகவல்களை பகிர்ந்து கொண்டார்.. குறிப்பாக, “தமிழக அரசுடன் 3500 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக, கோவையில் ஹைப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டுள்ளது.. இதில் தங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட உள்ளது. தஞ்சாவூரிலும் பெரிய பிளானுடன் கால் பதிக்க உள்ளது” என்றார் யூசுப் அலி.
ரைஸ் மில்: இந்த தகவலை கேட்டு தஞ்சாவூரே திக்குமுக்காடிப்போயுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் நெற்களஞ்சியம் என அழைக்கப்படும் நிலையில், விவசாயிகளுக்கு பயனளிக்கும் வகையில் தஞ்சாவூரிலேயே மாடர்ன் ரைஸ் மில்அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. ஒருவேளை லூலூ நிறுவனம் தஞ்சாவூரில் திட்டமிட்டபடியே மாடர்ன் ரைஸ் மில் அமைத்தால், விவசாயிகள் பெரிதும் பயன்பெறுவார்கள் என்றும் நம்பப்படுகிறது..
இந்த விஷயத்தை கேள்விப்பட்டதுமே, தஞ்சை மக்களும், விவசாயிகளும், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா மற்றும் லூலா குரூப்ஸ்-ன் நிர்வாக இயக்குனர் யூசுப் அலி ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துள்ளனர். தஞ்சாவூரில் மட்டுமல்லாமல், லூலு நிறுவனத்தின் சார்பில் கோவையை போலவே சென்னையிலும் மால் கட்டப்பட உள்ளதாம்..
ஹேப்பி செய்தி: இன்னொரு ஹேப்பி செய்தியும் வட்டமடித்து கொண்டிருக்கிறது.. அதாவது, கோவை மாவட்ட மேட்டுப்பாளையம், திண்டுக்கல் மாவட்ட ஒட்டன்சத்திரம் ஆகிய 2 இடங்களில் உணவு பதப்படுத்தும் மையம் அமையப்பட உள்ளதாகவும் தெரிகிறது.. இதையெல்லாம் கேள்விப்பட்டு அந்தந்த மாவட்ட மக்கள், மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.. அத்துடன், சம்பந்தப்பட்ட செயல்திட்டங்கள் அனைத்திலும், வேலைவாய்ப்புகளும் தங்குதடையின்றி கிடைக்கும் என்றும் பெருத்த நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமல்ல, லுலு குழுமத்தின் தலைவர் எம்.ஏ.யூசுப் அலி, செய்தியாளர்களிடம் சொன்னபோது, தஞ்சாவூரில் அரிசி ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.. இந்த குழுமம் தமிழ்நாட்டில் கிட்டத்தட்ட 6,000 பேருக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை உருவாக்கும்.
வேலைவாய்ப்பு: தொடர்ந்து, கோவை சிட்ரா, மேட்டுப்பாளையம் பகுதியில் பழங்கள், உணவு பதப்படுத்துதல் கிடங்கு அமைப்பது தொடர்பாக அமைச்சரிடம் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிலம் பெறுவதற்கான நடவடிக்கைகள் கேட்கப்பட்டிருக்கிறது.. லு லு நிறுவனம் வேளாண் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதியில் உள்ளதால், அதன் சார்ந்த வர்த்தகம் தமிழகத்தில் மேற்கொள்ள உள்ளோம்.
தமிழகத்தில் இப்போது 6 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் லு லு நிறுவனம் திட்டங்களை செயல்படுத்த உள்ளது. அடுத்ததாக, சென்னையில் மிகப்பெரிய மால் துவங்கப்படும்… தஞ்சாவூர் பகுதியில் மில் அமைத்து, சர்வதேச அளவில் அரிசி பேக்கிங் செய்யப்பட்டு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. கோவை மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்தவர்கள் 700 பேருக்கு கோவையில் ஹைப்பர் மார்க்கெட்டில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.