தற்கொலை செய்து கொள்ள நினைத்தேன் : நடிகர் ரோபோ சங்கர் உருக்கமான பேச்சு
காமெடி ஷோக்களில் அசத்தி வந்த ரோபோ சங்கர் பின்னர் சினிமாவில் களமிறங்கி பல படங்களில் நடித்து பிரபலமானார். ரோபோ சங்கரின் பிளஸே அவரின் அஜானுபாகுவான உடற்கட்டு தான். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் அவர் உடல் மெலிந்து பார்க்கவே பரிதாபமாக காணப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட ஒரு நோய் பாதிப்பால் அவரின் உடல் எடை கணிசமாக குறைந்தது. தற்போது அதிலிருந்து மீண்டு மீண்டும் பழைய உடற்கட்டுக்கு மெல்ல திரும்பி வருகிறார்.
இந்நிலையில் மாணவர்கள் மத்தியில் போதை விழிப்புணர்வு குறித்து பேசினார். அவர் பேசும்போது, ‛‛கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு தெரியாத்தனமாக ஒரு கிளியை வளர்த்து விட்டேன். அது என்ன கிளி என்று தெரியாமல் பெரும்பாடுபட்டேன். அதோடு, 5 மாதங்களாக படுத்த படுக்கையாக இருந்ததால் சாவின் விழிம்பிற்கு சென்று விட்டேன். அதற்கு முக்கிய காரணம் என்னிடமிருந்த சில கெட்ட பழக்கங்கள் தான். அதற்கு அடிமையாகி விட்டேன். அதனால்தான் போதை விழிப்புணர்வு பேரணி நடத்தும் உங்கள் முன்பு நான் உதாரணமாக நின்று கொண்டிருக்கிறேன். அதோடு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு எல்லாம் சென்று விட்டேன்'' என்று மாணவர்கள் மத்தியில் தான் பட்ட அவஸ்தை குறித்து உருக்கமாக பேசி இருக்கிறார் நடிகர் ரோபோ சங்கர்.