டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பிறந்து 4 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று, இறந்து போன தன்னுடைய தாய், தந்தை உடலுடன் 3 நாட்கள் உயிருடன் இருந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவர் காஷிப். 25 வயதான இவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் நசரத் எனும் இளம் பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களது மகிழ்ச்சியான வாழ்க்கையின் அடையாளமாக ஒரு குழந்தையும் பிறந்திருக்கிறது. ஆனால் இடையில் காஷிப் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டையிட தொடங்கியுள்ளார். இந்த சண்டை நாட்கள் செல்ல செல்ல தீவிரமாகியுள்ளது. பின்னர் ஒரு நாள் திடீரென காஷிப் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.
அதன் பின்னர் வீட்டில் இருப்பவர்களிடம் எவ்வித தொடர்பும் இல்லை. இப்படியே 6 மாதங்கள் வரை கழிந்திருக்கிறது. அதன் பின்னர் காஷிப்பின் மொபைல் நம்பரை எப்படியோ கண்டு பிடித்து நசரத் தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார். ஆனால் இந்த 6 மாதங்களில் காஷிப்பின் வாழ்க்கையில் ஏராளமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உத்தரப் பிரதேசத்தில் செய்த வேலையை விட்டுவிட்டு இங்கு டேராடூனில் ஜேசிபி ஓட்டுநராக காஷிப் பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
மட்டுமல்லாது இவருக்கும் 22 வயதுடைய இளம்பெண் அனம் என்பவரும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது. இருவரும் ஒன்றாக காதலித்து வந்துள்ளனர். பின்னர் ஓராண்டு முன்னதாக திருமணம் செய்துகொண்டுள்ளனர். வேலை, காதல், திருமணம் என இரண்டாவது வாழ்க்கையும் ஓரளவு பிரச்னையில்லாமல் நகர்ந்திருக்கிறது. ஆனால், வாழ்க்கையில் பொருளாதார சிக்கல் எனும் பெரும் புயல் வீச குடும்பம் நிலைகுலைந்து போயுள்ளது. இதிலிருந்து தப்பிக்க காஷிப் ரூ.5 லட்சம் வரை கடன் வாங்கியுள்ளார்.
வாங்கிய கடனுக்கு வட்டி சில மாதங்கள் வரை ஒழுங்காக கட்ட முடிந்துள்ளது. ஆனால் ஜேசிபி வேலை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுக்கவில்லை என்பதால், வட்டியை அடுத்தடுத்த மாதங்களில் சரியாக கட்ட முடியவில்லை. கடன் கழுத்தை இறுக்க, வேறு சிலரிடம் கடன் கேட்டிருக்கிறார். ஆனால் உரிய நேரத்தில் கடன் கிடைக்கப்படவில்லை. எனவே வாங்கிய கடனை கட்ட முடியாமல், கடன் கொடுத்தவர்களின் தொல்லையை தாங்க முடியாமலும் நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.
நாட்கள் இப்படியே நகர்ந்துக்கொண்டிருக்க திடீரென காஷிப் தொடர்ந்து மூன்று நாட்களாக ஆளையே காணவில்லை. இவரது முதல் மனைவி நரசத்தும், கணவர் காஷிப் தொடர்ந்து மூன்று நாட்கள் போன் எடுக்கவில்லை என்பதை உணர்ந்து தனது தந்தைக்கும், சகோதரனுக்கும் தகவல் கொடுத்திருக்கிறார். அவர்கள் காஷிப்பின் டேராடூன் வீட்டிற்கு வந்து பார்த்திருக்கின்றனர். வீடு பூட்டப்பட்டிருந்துள்ளது. எனவே அவர்கள் திரும்பி சென்றுவிட்டனர்.
ஆனால் காஷிப்பின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசவே அக்கம் பக்கத்தினர் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்திருக்கின்றர். தகவலின் அடிப்படையில் காஷிப் வீட்டிற்கு விரைந்த காவல்துறையினர் பூட்டை உடைத்து உள்ளே சென்று சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் கண்ட காட்சி அனைவரையும் உறைய வைத்துள்ளது. அதாவது காஷிப் மற்றும் அவரது மனைவி அனம் இருவரும் சடலமாக கிடக்க, அருகில் பிறந்து 4 நாட்களே ஆன அவர்களது பச்சிளம் குழந்தை அழுதுக்கொண்டு இருந்துள்ளது.
உடனடியாக குழந்தையை மீட்ட காவல்துறையினர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் காஷிப் மற்றும் அவரது மனைவியின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தாய், தந்தை சடலத்துடன் மூன்று நாட்ளாக பச்சிளம் குழந்தை ஒன்று உயிருக்கு போராடியவாறு இருந்துள்ள சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.